Published : 11 May 2021 04:38 PM
Last Updated : 11 May 2021 04:38 PM

தமிழ்நாட்டுக்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்: அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாட்டுக்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று (மே 11) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு பிற மாநிலங்களை விட மிகவும் குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது. நடைமுறைக்கு ஒத்துவராத விதிகளை அடிப்படையாக வைத்து தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

உலகிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பில் உலகில் முதலிடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

கரோனாவின் கோரப்பிடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி போடுவது மட்டுமே ஒரே வழி எனும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனாலும் கூட, தடுப்பூசி ஒதுக்கீட்டில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்துவதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டின் மக்கள்தொகை 7.62 கோடி ஆகும். தமிழகத்தை விட 26 லட்சம் மட்டுமே கூடுதலாக 7.88 கோடி மக்கள்தொகை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு 1.42 கோடி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு அதில் பாதி அளவாக 72 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டை விடக் குறைவாக 6.94 கோடி மக்கள்தொகை கொண்ட குஜராத்துக்கு 1.39 கோடி தடுப்பூசிகளும், 6.66 கோடி மக்கள்தொகை கொண்ட கர்நாடகத்திற்கு 1.06 கோடி தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது தமிழகத்திற்கு வழங்கப்பட்டதை விட முறையே இரு மடங்கும், ஒன்றரை மடங்கும் ஆகும். தடுப்பூசி ஒதுக்கீட்டில் இத்தகைய பாகுபாடு காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தடுப்பூசி ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசு கடைப்பிடிக்கும் அளவீடுகளும், அணுகுமுறைகளும்தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம் ஆகும். ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளை மாநில அரசுகள் எவ்வளவு வேகத்தில் மக்களுக்குச் செலுத்துகின்றன; மாநில அளவுகள் தடுப்பூசிகளை எவ்வளவு குறைவாக வீணடிக்கின்றன; ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவற்றில் முதல் இரு காரணிகளில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருப்பது உண்மை தான். ஆனால், அதற்காக யாரையும் குறை கூட முடியாது என்பதுதான் எதார்த்தம் ஆகும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. அப்போது போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசி போட முன்வரவில்லை; அதனால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் விகிதம் குறைவாக இருந்தது.

அதுமட்டுமின்றி, ஒரு தடுப்பூசி குப்பியைத் திறந்தால், அதிலுள்ள மருந்தைக் கொண்டு 10 பேருக்குத் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், பல இடங்களில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராததால், ஒரு குப்பி மருந்தில் ஒரு சிலருக்கு மட்டும் தடுப்பூசி போட்ட நிலையில் மீதமுள்ள மருந்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் வேகம் குறைந்ததற்கும், அதிகம் வீணானதற்கும் இதுதான் முதன்மைக் காரணமாகும்.

ஆனால், தமிழ்நாட்டில் இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 91% பயனாளிகளுக்குப் போடப்பட்டுவிட்டன. தடுப்பூசி வீணாகும் விகிதமும் பெருமளவில் குறைந்துவிட்டது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அதிக எண்ணிக்கையில் பதிவு செய்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதுதான் பாரபட்சம் இல்லாத சரியான அணுகுமுறையாக இருக்கும்.

எனவே, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக மத்திய அரசு உயர்த்த வேண்டும். மருந்து நிறுவனங்களிடமிருந்து நேரடியாக 1.50 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு, அதற்கான கொள்முதல் ஆணைகளைப் பிறப்பித்துள்ள நிலையில், அவற்றைத் தமிழகத்திற்கு விரைவாக வழங்கும்படி தடுப்பூசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x