Last Updated : 11 May, 2021 02:48 PM

1  

Published : 11 May 2021 02:48 PM
Last Updated : 11 May 2021 02:48 PM

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கண்காணிப்புக் குழுவினர் மீண்டும் ஆய்வு: ஓரிரு நாட்களில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்னும் ஓரிரு தினங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்கி ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையிலான இந்த குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலார் ஜோசப் பெல்லார்மின் அண்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் அமர்நாத், கனகவேல் ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த கண்காணிப்புக் குழுவினர் கடந்த 5-ம் தேதி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் முதல் கட்ட ஆய்வு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மட்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் நிறுவன பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும் செயல்படவில்லை. எனவே, ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை முழுமையாக சீரமைத்து பராமரிக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து இறுதிக் கட்ட சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் வரும் 15-ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து 15-ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இன்று மீண்டும் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆக்சிஜன் உற்பத்தி நிலையப் பகுதியையும், ஆக்சிஜன் உற்பத்தி பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளையும் குழுவினர் பார்வையிட்டனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வந்துசெல்லும் தனியான பாதை குறித்தும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.

ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக கண்காணிப்புக் குழுவின் அனுமதியுடன் நடைபெறும் எடை மேடை அமைக்கும் பணிகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து வல்லுநர் குழுவினருடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது எஸ்.பி ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x