Published : 11 May 2021 11:57 AM
Last Updated : 11 May 2021 11:57 AM

முயல் வேகத்தில் செயல்படுக: கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என, கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (மே 11) வெளியிட்ட அறிக்கை:

"18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட ரூ.700 முதல் 1,500 வரை தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக நிர்ணயித்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட இது 6 மடங்கு அதிகமாகும்.

சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டை ரூ.700 முதல் 900 வரையிலும், பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சின் மருந்தை ரூ.1,250 முதல் ரூ.1,500 வரையிலும் கட்டணமாக வசூலிக்கின்றனர். பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியை இலவசமாகப் போடுகின்றன.

ஆனால், இந்தியாவில் மட்டும் தனியார் பலன் பெறும் நோக்கில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மக்கள்தொகை 138 கோடி. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இவர்களுக்கு 2 டோஸ்கள் தடுப்பூசிகள் போட 188 கோடி டோஸ்கள் தேவை. கடந்த மே 8 ஆம் தேதி நிலவரப்படி, 2 டோஸ்கள் போட்டவர்கள் 3 கோடி 42 லட்சம். அதாவது, 3.6 சதவிகிதம். 1 டோஸ் மட்டும் போட்டவர்கள் 13 கோடியே 31 லட்சம். ஆக, மொத்தம் ஏறத்தாழ 20 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2 தனியார் நிறுவனங்களின் உற்பத்தியை வைத்துப் பார்க்கிறபோது, கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிருக்காக போராடும் மக்களை மத்திய அரசு காப்பாற்றுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.

இன்றைக்குத் தடுப்பூசி போடும் அளவு ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் 94 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 1,000 நாட்களாகிவிடும். அதாவது, 3 ஆண்டுகள் ஆகிவிடும்.

முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ் போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மே 1 முதல் 7 ஆம் தேதி வரை தினமும் சராசரி 16.6 லட்சமாக குறைந்துள்ளது. ஏப்ரலில் தினமும் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் அடிப்படையில் பார்த்தால், தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி போடும் பணி முடிய இன்னும் 3 மாதங்கள் ஆகும்.

தடுப்பூசி போடுவதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றிருப்பதாக பாஜக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், இந்தியாவில் 100 பேருக்கு 10.82 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால், இஸ்ரேல் நாட்டில் 120, பிரிட்டனில் 72, அமெரிக்காவில் 71 என்ற விகிதத்திலும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மக்கள்தொகையை விட 4 மடங்கு அதிகமாகவும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளை விட 20 மடங்கு அதிகமாகவும், இஸ்ரேலை விட 160 மடங்கு அதிகமாகவும் இந்தியா மக்கள்தொகையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், மற்ற நாடுகளோடு இந்தியாவை ஒப்பிடுவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி டோஸ் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 6 கோடியாகவும், பாரத் பயோடெக் தடுப்பூசி டோஸின் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 2 கோடியாகவும் உள்ளன. தோராயமாக இரு நிறுவனங்கள் மூலம் தினசரி 26 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும். தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்வதன் மூலமே இத்தகைய பற்றாக்குறையைப் போக்க முடியும்.

பேராயுதமாகப் பயன்படுத்த வேண்டிய தடுப்பூசி மருந்தை வணிகமாக்கி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிர்களோடு மத்திய பாஜக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. கரோனாவின் இரண்டாவது பரவல் தீவரம் அடைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியமானதாகும். அப்போது தான் மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள முடியும்.

ஆனால், மோடி அரசோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி அலட்சியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க 10-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. அவர்களது உற்பத்தியை முடுக்கிவிட்டால் மட்டுமே, நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

கரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் டோஸ் போட்டவர்களுக்கே இன்னும் இரண்டாவது டோஸ் போடவில்லை. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றைக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் கலந்த கேள்வி எழுகிறது.

எனவே, கடந்த கால மத்திய ஆட்சியாளர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு, கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x