Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

மே 12 - உலக செவிலியர் தினம்: தன்னலமற்ற சேவையின் மறுஉருவம் செவிலியர்கள்

பத்மஸ்ரீ. டாக்டர் வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல மருத்துவர், சென்னை

செவிலியர்கள் - அன்பின் இருப்பிடம், தியாகச் சுடர், பொறுமையின் சிகரம், சேவையின்மறு உருவம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் ஒரு தாய்க்கு இருக்கும் குணங்கள். செவிலியர்களை மறுபிறவி எடுத்த அன்னையராகக் கருதலாம். உறவாகவோ, நட்பாகவோ இல்லாத ஓர் மூன்றாம் நபர், நம் மீது பரிவு காட்டுவது பலருக்கு சாத்தியமில்லை. ஆனால், செவிலியர்கள் பரிவுடன் சேவை புரிகிறார்கள்.

செவிலியரின் பணி என்பது மனித வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தே உள்ளது. தாய் என்பவள், குழந்தைப் பராமரிப்பில் ஆரம்பித்து, அவர்களைக் காப்பாற்றி, நோய்களிலிருந்து குடும்பத்தினரைப் பாதுகாத்து, வீட்டில் உள்ள முதியோரைக் கவனிப்பது வரை தொடர்கிறது. எங்கெல்லாம் அன்பு நிறைந்த சேவை தேவையோ,அங்கெல்லாம் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். அதனால்தான் செவிலியர் பணியில் பெண்களே அதிகம் இருக்கிறார்கள்.

நோயின் வலியிலும், வேதனையிலும் நாம் துடித்த காலத்தில், மருத்துவமனைகளில் நம்மை அன்புடனும், பரிவுடனும் கவனித்துச் சேவை செய்யும் செவிலியர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லும் நாளாக ‘உலக செவிலியர்’ தினம் கொண்டாடப்படுகிறது.

‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரே, செவிலியர் சேவையின் முன்னோடி. இவர் இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடும்பத்தில் பிறந்தவர். ‘இறைவனால் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகவே’ எண்ணி செவிலியர் பணியை சேவைமனப்பான்மையுடன் செய்தார்.

ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்திதேடிச் சென்று சேவை புரிந்தார். அவரின் நினைவாக, அவர் பிறந்தநாளான மே 12-ம் நாள் ‘சர்வதேசசெவிலியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இது அவருடைய பணிக்குக் கிடைத்த சிறப்பாகும். இன்றும்நர்ஸிங் பட்டம் பெறும் செவிலியர்கள், கைவிளக்கில் ஒளியேற்றி, மனிதகுலத்துக்கு தன்னலமற்ற சேவை செய்ய உறுதி எடுக்கிறார்கள்.

மோசமான நோய்களுடன் உள்ள நோயாளிகளுக்கு நெருங்கிச் சேவை செய்யும் செவிலியர்கள், பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இரவு பகல் பாராதுகடுமையாக உழைக்கும் அவர்கள்,மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. இதையெல்லாம் தாண்டி, பலரையும் நோயிலிருந்து மீட்கவும், தேவையில்லாமல் நிகழும் மரணங்களைத் தடுக்கவும், மருத்துவர்களுடன் இணைந்து மகத்தான சேவையில் செவிலியர்கள் ஈடுபடுகின்றனர்.

தற்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது கரோனா என்னும் வைரஸ் நோய். உலக மக்களின் நன்மைக்காக செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிறப்பாக பணிசெய்து வருகிறார்கள். ஊண் உறக்கமின்றி இரவு பகல் பாராது பணியாற்றுகின்றனர். பாதுகாப்புக்கான கவச உடைகளை அணிந்தால், பலமணி நேரம் இயற்கை உபாதைக்காகக் கூட செல்ல முடியாது. தங்கள்குடும்பத்தினர், குழந்தைகளைப் பிரிந்து, ‘எந்த நேரத்திலும் கரோனா நோய் தங்களைத் தாக்கக் கூடும்’ என்ற ஒருவித பயத்திலேயே பணியைக் குறைவின்றி செய்து வருகிறார்கள்.

உலக மக்களின் நன்மைக்காக உழைக்கும் செவிலியர்களின் பணிக்கு நாம் ‘நன்றி’ என்று ஒற்றைவார்த்தையில் கூறி அவர்களின் பணியை குறைத்து எடைபோட்டு விடக்கூடாது. அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் என்றும் நலமுடன் வாழ நாம் அனைவரும் ஒன்றுபட்டு மனதார வாழ்த்துவோம். சிரித்த முகத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் சேவை செய்யும் செவிலியர்களைப் போற்றுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x