Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தென்னை உற்பத்தியில் அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கின்றன. தேங்காய் மற்றும் இளநீர் தேவைக்காக மட்டுமே தென்னை மரங்கள் என்ற நிலை காலப்போக்கில் மாறியுள்ளது. இதற்கு, இதன் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதுதான் காரணம்.
தென்னை மட்டையில் இருந்து தென்னை நார் உறித்தெடுக்கப்பட்டு கயிறு திரிக்கப்படுகிறது. அதன் தூள் செங்கல் வடிவில் கட்டிகளாக மாற்றப்பட்டு, மண் இல்லாத விவசாய தேவைக்காக ஏற்றுமதியாகிறது. தென்னஞ்சோகை தடுக்கு பின்னவும், வீடு, தொழிற்சாலைகளில் கூட்டி பெருக்க பயன்படும் சீமார் தயாரிக்கவும் பயன்படுகிறது.
கிராமப் புறங்களில் தென்னஞ்சோகையில் இருந்து சீமார் தயாரிப்பது பெண் பணியாளர்கள் மூலமாக நடைபெறுகிறது. இதன் தேவை சந்தையில் அதிக அளவு இருந்தும் குறைந்த அளவே உற்பத்தி எனும் நிலை உள்ளது. சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகள் சீமார் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், அதன் உற்பத்திக்கு தேவையான ஆட்கள் இன்றி திண்டாடி வருகின்றனர். மத்திய அரசின் 100 நாட்கள் வேலை திட்டத்தில் ஆர்வம் காட்டும் கிராமிய பெண்களால், சீமார் உறிக்கும் பணிக்கு ஆட்கள் வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இத்தொழில் தொடர் சிக்கலை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரகுரு (35) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், சீமார் உறிக்கும் கருவியை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தியாளரிடம் அவர் கூறும்போது, "எங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருந்து சீமார் பிரித்தெடுப்பது தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே ஆராய்ச்சி செய்து வந்தேன். கரோனா விடுமுறை நாட்கள், இந்த பணியை துரிதமாக்கியது. இதற்காக தென்னை மட்டையில் இருந்து சோகையை பிரித்தெடுக்கவும், பின் சோகையில் இருந்து சீமார் பிரித்தெடுக்கவும் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆட்கள் மூலமாக உறிப்பதைவிட இயந்திரத்தில் உறிப்பது சுத்தமாக இருக்கும். இம்மாதிரியான இயந்திரத்தின் தேவை நாடு முழுமைக்கும் தேவையானதாக உள்ளது. மேலும், நவீன கருவிகள் உதவியுடன் இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT