Last Updated : 05 Dec, 2015 03:54 PM

 

Published : 05 Dec 2015 03:54 PM
Last Updated : 05 Dec 2015 03:54 PM

ஒரு மாதமாக தொடரும் மழை: கால் சேற்றுப்புண்ணால் மக்கள் அவதி

கடந்த ஒருவாரமாக சேற்றுப்புண்ணால் அவதியுறுகிறோம். இது எப்போது குணமாகுமென்றே தெரியவில்லை என கடலூர் மாவட்ட மக்கள் கவலையுடன் கூறினர்.

கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில் வாசகர்கள் உதவியுடன் 'தி இந்து தமிழ்' பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, அவர்களின் உடனடித் தேவைக்கான நிவாரணப் பொருட்கள் கடந்த நவ.21-ம் முதல் தொடர்ந்து வழங்கிவருகின்றனர்.

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, மண்ணெண்ய் ஸ்டவ், மளிகைப் பொருட்கள், அரிசி, சிறுவர்களுக்கான ஆடைகள், பெரியவர்களுக்கு லுங்கி, இளம்பெண்களுக்கு சுடிதார், மாற்று உடையுடன், ஹார்லிக்ஸின் ஓட்ஸ் மற்றும் ஹார்லிக்ஸூம் வழங்கப்படுகின்றன.

நமது நிவாரணப் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்கா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலிருந்து வாசகர்கள் உதவ முன்வந்துள்ளனர். தற்போது சென்னைக்கும் நிவாரணப் பொருட்களையும் வழங்கிவருகின்றனர். இந்தப் பணியில் கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனமும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பெரும்பாங்காற்றி வருகிறது.

இந்த சூழலில் நிவாரணப் பொருட்களை வழங்கும் போது சில பெண்களும், ஆண்களும் கால் தாங்கியவாறு நடந்து வந்தனர். அப்போது அவர்களிடம் கேட்டபோது, கடந்த ஒருவாரமாக சேற்றுப்புண்ணால் அவதியுறுகிறோம்.வீட்டுக்குள்ளேயும் சேறும், வெளியிலேயும் சேறு என்ன பண்றது? அரசு கொடுத்த மண்ணெண்ய அடுப்பெரிக்க போதவில்லை. அத வைச்சு எப்படி சேற்றுப்புண்ண ஆத்தறுது என்றனர்.

மேலும் கழிவுநீரும், மழைநீரும் கலந்து வருவதால் கால் அரிப்பு இருப்பதாவும்,பகலில் ஈ தொல்லையும், இரவில் கொசுத்தொல்லையாலும் தூக்கத்தை இழந்து வருவதாகத் தெரிவித்தனர். இப்போதைக்கு வெளியே போக வர முடியலை, சேத்துபுண் ஆற மருந்து இருந்தா கொடுங்கள் என்றனர்.

மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் ஜவகர்லாலிடம் கேட்டபோது, ''சேற்றுப்புண்ணை குணப்படுத்த மருந்து கொடுத்துவருகிறோம். அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவில் சென்றடையும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x