Published : 10 May 2021 05:48 PM
Last Updated : 10 May 2021 05:48 PM
கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையில் தமிழகத்தில் பெண்கள், இளம் வயதினர் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம், முதியோர் உயிரிழப்பு குறைந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கரோனா வைரஸ் 2-வது அலையின் உச்சம் தமிழகத்தில் இன்னும் நடக்கவில்லை. கரோனா முதல் அலையில் உயிரிழந்தவர்களின் வயது மற்றும் பாலினம் ஆகியவற்றோடு 2-வது அலையில் ஏற்பட்டு வரும் உயிரிழப்போடு ஒப்பிட்டால், பெண்கள் மற்றும் இளம் வயதினர் உயிரிழப்பைச் சந்திக்கும் வீதம் அதிகரித்துள்ளது.
கரோனா முதல் அலையில் 12 வயதுக்குட்பட்டோர் மட்டும் 3.8 சதவீதம் அளவில் தொற்றுக்கு ஆளாகினர். 2-வது அலையில் 3.4 சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
முதல் அலையில் 13 வயதுமுதல் 60 வயதுக்குட்பட்டோர் 83.1 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகினர். 2-வது அலையில் 82.1 சதவீதம் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
முதல் அலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 13.1 சதவீதம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2-வது அலையில் 14.4 சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர்.
பெண்கள் பாதிக்கப்படுதலைப் பொறுத்தவரை, முதல் அலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 25.7 சதவீதம் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது அலையில் 31.5 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர்.
50 வயது முதல் 60 வயதுக்குட்பட்டோர் முதல் அலையில் 27.5 சதவீதம் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது அலையில் 40.8 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.
41 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் முதல் அலையில் 29.4 சதவீதம் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது அலையில் 33.3% பேர் பாதிக்கப்பட்டனர்.
31 வயது முதல் 40 வயதுள்ள பிரிவினர் முதல் அலையில் 33% பேர் தொற்றுக்கு ஆளாகிய நிலையில் 2-வது அலையில் 19.9% பேர் பாதிக்கப்பட்டனர். 20 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் முதல் அலையில் 38% தொற்றுக்கு ஆளாகிய நிலையில், 2-வது அலையில் இது குறைந்து 35.9 ஆகச் சரிந்துள்ளது.
உயிரிழப்பைப் பொறுத்தவரை, முதல் அலையில் பெண்களைப் பொறுத்தவரை உயிரிழப்பு 27 சதவீதமாக இருந்தது. ஆனால், 2-வது அலையில் அது 33.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், பாலியப் பாகுபாட்டைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை. மகளிர் பிரிவில் 40 சதவீதமும், ஆண்களில் 60 சதவீதம் என முதல் அலையில் இருந்ததைப் போன்றே இருக்கிறது.
21 வயது முதல் 60 வயதுள்ள பெண்களில் முதல் அலையில் உயிரிழப்பு 38.7% இருந்தது. இது 2-வது அலையில் 43.6% ஆக அதிகரித்துள்ளது.
60 வயது அதற்கு மேற்பட்டவர்களை எடுத்துக்கொண்டால், முதல் அலையில் 61 சதவீதமாக இருந்த உயிரிழப்பு 2-வது அலையில் 56.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கரோனா 2-வது அலையில் தினசரி உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். அது கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையில் 12 வாரங்களில் 7,900 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஜூலை முதல் செப்டம்பர் வரை உயிரிழப்பு உச்சத்தில் அதாவது 1.62 சதவீதம் இருந்தது. ஆனால், 2-வது அலையில் இப்போது 1.03 சதவீதம் உயிரிழப்பு இருக்கிறது.
அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோய்ப் பிரிவின் மூத்த மருத்துவர் வி. ராமசுப்பிரமணியன் ’தி இந்து’வுக்கு(ஆங்கிலம்) அளித்த பேட்டியில், “மக்கள் யாரும் வீட்டுக்குள் இருப்பதில்லை, அதனால்தான் அனைத்து வயதுப் பிரிவினரும் குழந்தைகள் உள்பட பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படக் காரணம் என்னவெனில், தாமதமாக மருத்துவ சிகிச்சைக்கு வருவது. தன்னை கரோனா தாக்காது, தாக்கினாலும் வீரியமாக இருக்காது என்ற நினைப்பு” எனத் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் கே. குழந்தைசாமி கூறுகையில், “2-வது அலை முழுமையாக நடந்து முடிந்தபின்பே தெளிவான விஷயம் கிடைக்கும். அதிகமானோர் பாதிக்கப்படுதல் என்பது, கண்டறியப்டாமலும், கண்டுபிடிக்கப்பட்டும் இளம் வயதினர் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். இதில் இணை நோய்கள் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால்தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT