Last Updated : 10 May, 2021 04:57 PM

 

Published : 10 May 2021 04:57 PM
Last Updated : 10 May 2021 04:57 PM

கரோனா முழு ஊரடங்கு அமல்: ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வுப் பணிகள் தற்காலிக நிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கியது.

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்த அகழாய்வுப் பணியில் பல்வேறு பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக சிவகளையில் கல் வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

அதேபோல் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் சுமார் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமான அமைப்பும், சங்க இலக்கியத்தில் கூறப்படும் சங்கறுக்கும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன.

இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து விதமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெறும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x