Published : 10 May 2021 05:00 PM
Last Updated : 10 May 2021 05:00 PM

ஆக்சிஜன் செறிவூட்டிகள்: சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்

சென்னை

ஆக்சிஜன் செறிவூட்டிகளை சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினர்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சுந்தரம் - கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை மூலமாக ரூபாய் 18 கோடி மதிப்பிலான 1,600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழக அரசுக்கு அளிக்கும் வகையில், முதல் கட்டமாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை தலைவர் ஸ்வரன்சிங் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் சேதுராமன் ஆகியோர் வழங்கினர்.

சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட கோவிட்-19 நிவாரணப் பொருட்களை தமிழக முதல்வர் கொடியசைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள 1,100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும்.

மேலும், சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை 4 லட்சம் முகக்கவசங்கள், 2 லட்சம் முகமூடிகள் (Face shields), 1 லட்சம் ஜோடி மருத்துவக் கையுறைகள் மற்றும் 1,000 எண்ணிக்கையிலான பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்துடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அடுத்த வாரத்தில் பிற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்படும்.

கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஒவ்வொரு வட்டாரத்திலும் ஏற்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து சுய விருப்பத்தின் பேரில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, OLAM International மற்றும் TEMASEC Foundation என்ற பன்னாட்டு நிறுவனங்கள் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், OLAM International பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சிங்கப்பூர் நாட்டு தூதர் பாங் காக் டியான், முதன்மைச் செயலாளர் ஜான் சியோ, சிங்கப்பூர் தூதரகத்தின் துணைத் தூதர் ஆபிரகாம் டான், OLAM International பன்னாட்டு நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் தியாகராஜன் மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x