Published : 10 May 2021 04:16 PM
Last Updated : 10 May 2021 04:16 PM
திருச்சியில் காலாவதியான ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதாகச் சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை, திருச்சி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி தொடங்கியது.
ஞாயிறன்று மருந்து விற்பனை நடைபெறாத நிலையில், இன்று ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்துக்கு வெளியில் நேற்று இரவே 20-க்கும் அதிகமானோர் வந்து காத்திருந்தனர். இந்த எண்ணிக்கை காலையில் 200 ஆக உயர்ந்தது. இதனால், அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரிக்கு வெளியே மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மருந்து கேட்டு கடந்த 2 நாட்களாக நெரிசல் ஏற்படுவதால் அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸார் நுழைவு வாயில் முன் இரும்புத் தடுப்புகளை வைத்து மருந்து வாங்க வருவோரின் ஆவணங்களை ஆய்வு செய்தபிறகு உள்ளே செல்ல அனுமதித்தனர்.
ரெம்டெசிவிர் மருந்து வாங்க 200 பேர் காத்திருந்த நிலையில், 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. அதிகம் பேர் மருந்து கேட்கும் நிலையில், தினமும் குறைந்த எண்ணிக்கையில் மருந்து விற்பது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் கேட்டபோது அவர் கூறியது:
''வரையறுக்கப்பட்ட அளவே ரெம்டெசிவிர் மருந்து வரப் பெற்றுள்ளது. பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டாலே ரெம்டெசிவிர் மருந்து செலுத்த வேண்டும் என்றில்லை. அரசு மற்றும் சுகாதாரத் துறை கூறியுள்ள வழிகாட்டுதலின்படியே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, ஆவணங்களின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், மே 8-ம் தேதி 184 தொகுப்பு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. அரசின் வழிகாட்டுதலுக்கு உட்படாத- சரியான காரணம் இல்லாத 18 பேருக்கு மருந்து வழங்கப்படவில்லை.
இன்றும் 300 தொகுப்பு மருந்துகள் வரப்பெற்றுள்ளன. மருந்து விற்பனை 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை ஒரு வாரம் கவனித்துவிட்டு, எவ்வளவு தேவைப்படும் என்று கணித்து, தேவைப்பட்டால் கூடுதலாக அனுப்புமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
ரெம்டெசிவிர் மருந்துகள் 3 மாதங்களில் காலாவதியாகிவிடும் என்று தொடக்கத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த மருந்தை 12 மாதங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், மருந்துக் கட்டுப்பாடுத் துறை மூலம் காலாவதிக் காலத்தை மாற்றி புதிய வில்லை ஒட்டப்பட்டதே ஒழிய, காலாவதியான மருந்து விற்பனை செய்யப்படவில்லை. ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார் வந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் நாள்தோறும் 2,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது நாள்தோறும் 6,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு நோய்த் தீவிரம் அடையாமல் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்காகவே கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 12 முதல் 14 வரை உள்ளது.
காந்தி மார்க்கெட் மொத்த விற்பனையை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் உரிய முடிவு எடுக்கப்படும். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாகக் கடைப்பிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.''
இவ்வாறு ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT