Published : 10 May 2021 03:23 PM
Last Updated : 10 May 2021 03:23 PM
கரோனா பரவலைத் தடுப்பதற்காக, பைபர் படகுகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில், கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு, 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், கடலுக்குச் சென்று மீன்பிடிக்கச் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களாக விசைப் படகுகள் அனைத்தும் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கடலில் குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீன் பிடிக்க, பைபர் படகுகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், இன்று (மே 10) முதல் வருகிற 24-ம் தேதி வரை, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனிடையே, நாகை அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மீன் இறங்கு தளங்களில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் மீன், இறால் ஆகியவற்றை வாங்கக் குவிகிறார்கள். எனவே, இங்கு பொதுமக்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், நாகூர் பட்டினச்சேரி, கல்லார், விழுந்தமாவடி, வேதாரண்யம் வரை அனைத்து கிராமங்களிலும் பைபர் படகில் சென்று மீன் பிடிக்க இன்று முதல் வருகிற 24-ம் தேதி வரை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தடை விதித்துள்ளார்.
இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே விசைப்படகுகளுக்குக் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பைபர் படகுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனர்.
எனவே அரசு, மீன்பிடி தடைக் கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். தடை உத்தரவு பிறப்பித்ததால் முற்றிலும் வருமானமின்றி பரிதவிக்கும் மீனவர்களுக்கு, தடைக் கால நிவாரணத் தொகையை உயர்த்தி ரூ.20 ஆயிரமாக வழங்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT