Last Updated : 10 May, 2021 02:47 PM

1  

Published : 10 May 2021 02:47 PM
Last Updated : 10 May 2021 02:47 PM

ஊரடங்கின்போது பொதுமக்களிடம் போலீஸார் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்: புதுக்கோட்டை எஸ்.பி. உத்தரவு

எல்.பாலாஜி சரவணன்.

புதுக்கோட்டை

கரோனா ஊரடங்கில் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும் என, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, காவல் துறையினருக்கு தனது குரல் பதிவு மூலம் அவர் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

ஊரடங்கின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், பொதுமக்களிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். லத்தியை வைத்துக்கொண்டு முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது. தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் வந்தால் அவர்களது அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு அனுப்பி வைக்க வேண்டும். வணிகர்களையும் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்துங்கள்.

எந்த இடத்திலும் தேவையற்ற வாக்குவாதம் இருக்கக் கூடாது. இதேபோல், உடல்நிலை சரியில்லாதவர்கள், முதியவர்களின் தேவை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.

வேண்டுமென்றே பிரச்சினை செய்பவர்களை வீடியோ எடுத்து அதற்கேற்ப வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், முழு ஊரடங்கின்போது புதுக்கோட்டை மாவட்ட போலீஸார், பொதுமக்களிடம் நண்பனாக நடந்துகொள்ள வேண்டும். இதுவரை அளிக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பைப் போன்று இன்னும் எதிர்பார்க்கிறேன். ஒழுங்கின்றி நடந்துகொள்ளும் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x