Published : 10 May 2021 12:05 PM
Last Updated : 10 May 2021 12:05 PM
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் தமிழகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏப்.7-ம் தேதி பதவியேற்றுக்கொண்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவரும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அரசியல் கட்சித் தலைவர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சுற்றுலாத் துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மதிவேந்தனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஆம், எனக்கு #COVID19 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். என் மீது நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி! நலமுடன் இருக்கிறேன். மீண்டு வருவேன்'' என்று மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் மட்டுமே அவருக்கு இருப்பதால், மருத்துவர் அறிவுறுத்தலின்பேரில் சென்னை, அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரங்களில், அதிக அளவிலான மக்கள் கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் உட்படப் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT