Published : 10 May 2021 10:33 AM
Last Updated : 10 May 2021 10:33 AM

எதிர்க்கட்சித் தலைவர் யார்?- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 65 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. இதனால் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அதிமுகவில் எதிர்க்கட்சித்தலைவர் யார் என்பதற்கான போட்டி ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே நடப்பதால் முதல்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் கூட்டம் கூடியது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 65 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்தது. இரட்டை இலை சின்னத்தில் கூட்டணி சார்பில் ஒருவர் போட்டியிட்டார். அதிமுக கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களைப் பெற்றன. பாஜகவுடன் கூட்டணி, 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அவசரப்பட்டு முடிவெடுத்தது, மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்காமல் இருந்தது, உட்கட்சிப் பூசல், கரோனா பரவலை சரியாகக் கையாளாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்தத் தேர்தலுக்கு முன்னரே அமமுகவையும், சசிகலாவையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என அதிமுகவில் சில தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதை ஏற்கவில்லை. இதனால் 20 இடங்களில் அதிமுகவின் வாக்குகளை அமமுகவினர் பிரித்தனர். போட்டி வேட்பாளர் சேந்தமங்கலம் வாக்குகளைப் பிரித்ததால் அந்தத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி பறிபோனது.

இதேபோன்று சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் என்று கருதப்பட்ட சிஏஏ சட்டத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு சிறுபான்மை மக்கள் வாக்குகளை இழக்கக் காரணமாக அமைந்தது.

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டாலினுக்கு இணையாகப் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், கொங்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுக கணிசமான இடங்களைப் பெற்றது. 10 அமைச்சர்கள் தோற்றுப்போயினர்.

சென்னை மண்டலம், மத்திய மண்டலம், திருவண்ணாமலை, டெல்டா உள்ளிட்ட பல மண்டலங்களில் அதிமுக பலத்த தோல்வியைச் சந்தித்தது. அதிமுகவில் பல அமைச்சர்கள் தொகுதியை விட்டு வெளியே வராமல் தொகுதியிலேயே முடங்கினர்.

இந்நிலையில் 66 இடங்களைப் பெற்ற அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை கட்சித் தலைவராக யார் அமருவார்கள் என்பதற்கான போட்டி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடக்கிறது. மே 7 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இரு தரப்பிலும் காரசாரமாக மோதிக்கொண்டதில் முடிவெடுக்கப்படாமலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவை தொடங்க உள்ளதால் உடனடியாக எதிர்க்கட்சித்தலைவரை தேர்வு செய்யவேண்டிய அவசியம் காரணமாக இன்று மீண்டும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.

காலை 8-30 மணிக்கு ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் நடக்கும் அலுவலகம் முன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். கூட்டம் தொடங்கியதை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரத்தொடங்கினர். தற்போது கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இருவரும் பிடிவாதம் பிடிப்பதால் மூன்றாவதாக ஒருவரை தலைவராக தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x