Published : 31 Dec 2015 04:05 PM
Last Updated : 31 Dec 2015 04:05 PM
பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டங்கள் தயாரிக்க, களிமண் கிடைக்காததால் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.
காலமாற்றத்தால் மண்பானை மீது மோகம் குறைந்தாலும், இன்றும் கிராமப்புறங்களில் பொங்கல், மாட்டுப்பொங்கல் தினங்களில் பழங்கால் முறைப்படி புத்தம் புதிய மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் பண்பாடு . இன்று நகர்புறங்களில் மண்பாண்ட சமையலுக்கு வரவேற்பு இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் தீபத்திருநாள், பொங்கல் உள்ளிட்ட தினங்களில் தான் நமக்கு மண்பாண்டங்கள் நினைவுக்கு வருகிறது.
மண்பாண்ட தொழில் கடந்த சில ஆண்டுகளாக பருவமாற்றங்கள், ஏரிகளில் களிமண் எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் காட்டும் கெடுபிடி, மண் தட்டுபாடு, மண்பானை தயாரிக்க பயன்படும் உபகரணங்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் தடுமாறி வருகிறது.
நிகழாண்டில் பெய்த தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாலும், மண் எடுக்க அதிகாரிகள் காட்டும் கெடுபிடியால் பொங்கல் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் மண்பாண்ட தொழிலாளர்கள்.
மண்பானைகளில் பொங்கல்
இதுகுறித்து மண் பானை தயாரிக் கும் முருகேசன் மற்றும் தொழிலாளர் கள் கூறும்போது, தமிழகத்தில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் நலிந்து வருகிறது. தற்போது, இத் தொழிலில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவது இல்லை. அவர்கள் திருப்பூர், பெங்களூருபோன்ற இடங்களுக்கு கூலித் தொழில் செய்ய சென்றுவிட்டனர்.
சமீபகாலமாக மண்பாண்டங்களில் தயாரிக்கும் உணவுகள் மீது மக்கள் ஆர்வம் கொண்டுள்ளதால், மீண்டும் எங்கள் தொழில் புத்துயிர் பெறும் என்கிற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதாலும், அதிகாரிகளின் கெடுபிடியால்
பொங்கலுக்கு தேவையான பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்க தேவையான களிமண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிக விலை கொடுத்து களிமண், மண் வாங்கி வந்து உற்பத்தியில் ஈடுபட்டாலும், போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதுமட்டுமின்றி மண்பாண்ட தொழிலுக்கு என செங்கல் உற்பத்தியாளர்கள் சிலர், அதிகாரிகளை ஏமாற்றி மண் எடுத்துச் செல்கின்றனர்.
இதனைத் தடுக்க மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 முதல் 8 டிராக்டர்கள் களிமண் இருந்தால் போதும், எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வோம். பொங்கல் நாளில் பழங்கால வழக்கப்படி மண்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவதை மக்கள் மறந்துவிட்டதே, இத்தொழில் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம். மண்வாசனை மறக்காமல், பொங்கல் திருநாளில் அனைவரும் மண்பாண்டங்களில் பொங்கல் வைத்து வழிபட்டால் தான், எங்களுக்கு பொங்கலுக்கு இனிக்கும், என்றனர்.
கிருஷ்ணகிரியில், பொங்கல் பண்டிகைக்காக பானைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT