Published : 10 May 2021 09:58 AM
Last Updated : 10 May 2021 09:58 AM

ஏழு தமிழர்களை விடுதலை செய்க: முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை

ஏழு தமிழர்களை விடுதலைச் செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று விடுத்துள்ள அறிக்கை:

தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திமுக வலியுறுத்தி வருகிறது.

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மதிமுக சார்பில் அன்போடு வேண்டுகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x