Published : 25 Dec 2015 11:28 AM
Last Updated : 25 Dec 2015 11:28 AM
மெட்ராஸ் செண்ட்ரல் என்ற குழுவினர் எடுத்த ‘Chennai Raped' என்ற வெள்ள பாதிப்பு குறித்த ஆவணப்படம் அதன் தலைப்புக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளத்துக்கான காரணங்களை விவரிக்கும் இந்த ஆவணப்படத்தின் தலைப்பு பாலியல் பலாத்காரம் குறித்தும், பெண்களின் வேதனை பற்றியும் கவலையின்றி இத்தகைய தலைப்பை கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது படத்தின் தலைப்பு ரசனைகெட்டத் தனமாகவும், பெண்களின் வலியை புறக்கணிப்பதாகவும் உள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டிசம்பர் 17-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தின் தலைப்பைக் காட்டும் போது 'Raped' என்ற வார்த்தை குருதிச்சிதறல்களுடன் காண்பிக்கப்பட்டதுதான் பெரிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
எனவே ஆவணப்படத் தயாரிப்பு குழு உடனடியாக தலைப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து குறும்பட இயக்குநர் வைஷ்ணவி சுந்தர் கூறும்போது, “பாலியல் பலாத்காரத்தை குறிக்கும் rape என்ற சொல்லை அதைத் தவிர பிற இடங்களிலும் குறிப்பிடும்போது, பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படும் பெண்களின் வலியையும் துயரத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைகிறது. இது போன்ற விஷயங்களை முதல்முறையாக நாம் பார்ப்பதில்லை. ரேப் என்ற வார்த்தை இப்படியாக பல இடங்களில் தளர்வாகவும் பொத்தாம் பொதுவாகவும் பயன்படுத்தப்படுகின்றன, இதன் விளைவுகளை அவர்கள் அறிவதில்லை” என்றார்.
ஆனால் படத்தயாரிப்பு குழுவினர் தலைப்பை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிறைய பார்வையாளர்களை கவர்வதற்காக இத்தகைய தலைப்பு பயன்படுத்தப்படுவதாக ஆர்வலர்கள் சிலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் படத்தை எடுத்த மெட்ராஸ் செண்ட்ரல் குழுவின் பிரதீப் முத்து என்பவர் கூறும்போது, "வெள்ள பாதிப்புகளின் தீவிரத்தை காட்டவே நாங்கள் முயன்றுள்ளோம். நாங்கள் பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள், எங்கள் குழுவிலும் பெண் கலைஞர்கள் உள்ளனர். நம் தாய் மண்ணான சென்னைக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையே படத்தின் தலைப்பு பிரதிபலிக்கிறது.
ஆனால், படம் என்ன சொல்ல வருகிறது என்பதிலிருந்து கவனம் தலைப்புச் சர்ச்சை பக்கம் திரும்பியது துரதிர்ஷ்டமே. விமர்சனம் செய்பவர்கள் முழு வீடியோவையும் பார்த்தார்களா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது” என்றார்.
ஆவணப்பட இணைப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT