Published : 01 Jun 2014 12:51 PM
Last Updated : 01 Jun 2014 12:51 PM

டீசல் விலை அதிகரிப்பு: மத்திய அரசு மீது ஜெயலலிதா சாடல்

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளை மாற்றம் ஏதுமின்றி பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து கடைபிடிப்பதாக சாடியுள்ள முதல்வர் ஜெயலலிதா, டீசல் விலை அதிகரிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முக்கிய கவனமே உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தான் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறிய ஓரிரு நாட்களிலேயே, விலைவாசியை உயர்த்தும் வகையில், இன்று முதல் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தியுள்ளது வேதனை அளிக்கிறது.

இந்த விலை உயர்வு காரணமாக, ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மாணவ-மாணவியர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை எளிய பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடுதல் வாகனக் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இது மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டீசல் விலை என்பது சரியான விலை நிர்ணயம் அல்ல. முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து, வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை; அதனை இங்கு சுத்திகரிக்க ஆகும் செலவு; உள் நாட்டிலேய உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை எடுக்க ஆகும் செலவு மற்றும் அதனைச் சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு; பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் ஓரளவு குறைக்கப்படுவதோடு, விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படும்.

எனவே, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசியை ஓரளவு கட்டுப்படுத்தவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணய அதிகாரத்தை திரும்பப் பெறவும், தற்போதுள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தை மாற்றி அமைக்கவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய மத்திய அரசின் இந்த நடவடிக்கை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து கடைபிடிப்பதாகவே உள்ளது.

எது எப்படியோ, தற்போதைய டீசல் விலை உயர்வு, மாற்றம் மூலம் ஏற்றம் காணலாம் என்று நினைத்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாரதப் பிரதமர் இதில் தலையிட்டு, இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x