Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் இடவசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மாடிப் படிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் மாவட்ட நூலகம் இயங்கி வருகிறது. 2 மாடிகள் உள்ள இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் மாவட்ட நூலகம் செயல்படுகிறது. முதல் தளத்தில் குழந்தைகளுக்கான நூலக அறையும், இரண்டாவது தளத்தில் மாவட்ட நூலகர் அறையும், அலு வலகமும் உள்ளன.
மாவட்ட மைய நூலகத்துக்கு தினமும் ஏராளமான வாசகர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் முகப்பில் வைக்கப்பட்டுள்ள நாளிதழ்களை மட்டுமே படித்துவிட்டுச் செல்கின்றனர். நூலகத்திலுள்ள நூல்களை எடுத்துப் படிக்க முடிவதில்லை. கரோனா காலம் என்பதால் கடந்த ஆண்டு விடுமுறை விடப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாவட்ட மைய நூலகம் இயங்கத் தொடங்கியது. அப்போது முதல் தற்போது வரை நூல்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் வாசகர்கள் செல்ல முடியவில்லை. மாவட்டத்தில் உள்ள பிற நூலகங்களுக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களை அப்பகுதியில் அடுக்கி வைத்திருப்பதே இதற்குக் காரணம்.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 157 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்துக்கும் விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் இருந்தே அனைத்து விதமான நூல்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், நூலகத் துறையால், விருதுநகர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்கள் அனைத்தும் மாவட்ட மைய நூலகத்திலேயே கட்டுக்கட்டாக குவிக்கப்படுவதால் அவை அனைத்தும் நடைபாதைகளிலும், மாடிப் படி களிலும்,ரேக்குகளுக்கு இடையில் உள்ள இடைவெளியிலும் வைக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட மைய நூலக அலுவலர்கள் கூறியதாவது: போதிய இடவசதியின்றி மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. கடந்த 2016 முதல் 2019 வரை கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் கடந்த ஆண்டுதான் வந்தன. மேலும், இந்த ஆண்டுக்குரிய புத்தகங்களும் தற்போது வந்துள்ளன. புத்தகங்கள், அவற்றின் பதிப்புகள், எண்ணிக்கைகள் குறித்த தொகுப்பாணை வராததால் புத்தகங்களைப் பிரித்து மாவட்டத்தில் உள்ள 157 நூலகங்களுக்கும் அனுப்பி வைக்க முடியாத நிலை உள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT