Published : 10 May 2021 05:13 AM
Last Updated : 10 May 2021 05:13 AM

வெளி மாநிலங்களில் இருந்து மூலப்பொருட்கள் விநியோகம் இல்லை: தமிழகத்தில் ரூ.200 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு; 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு 

கோவில்பட்டி

தமிழகத்துக்கு மூலப்பொருட்கள் விநியோகம் தடைபட்டுள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

கரோனா காரணமாக தற்போது கர்நாடகா, கேரள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் தமிழகத்தில் இயங்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வழக்கமாக அந்த மாநிலங்களில் இருந்து வரும் வெள்ளை குச்சி மற்றும் தீப்பெட்டி தயாரிக்க தேவையான மட்டி, அல்பீசியா, முருங்கை மரத்தடிகள் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.

தமிழகத்தில் இன்று (10-ம் தேதி) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், மற்றொரு மூலப்பொருளான பொட்டாசியம் குளோரேட் மதுரை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து வருவதும் 2 நாட்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. வடமாநிலங்களில் ஊரடங்கு காரணமாக அங்குள்ள வியாபாரிகள், தமிழகம் வந்து தீப்பெட்டி கொள்முதல் செய்வதையும் நிறுத்திவிட்டனர். இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களின் நலன், தொழில் பாதுகாப்பு ஆகியவற்றை கருதி 2 வாரங்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்வது என அறிவித்துள்ளனர்.

தீப்பெட்டி தொழில் நலிவுஇதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறும்போது, “ஊரடங்கால் தீக்குச்சிகள் தயாரிக்க பயன்படும் மரத்தடிகளை கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வர முடியவில்லை. மதுரை, புதுச்சேரியில் இருந்து பொட்டாசியம் குளோரேட் வரத்தும் நின்றுவிட்டது. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை. கடந்த 2 வாரத்தில் தமிழகத்தில் ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். ஏற்கெனவே மூலப்பொருட்கள் 30 சதவீத விலை உயர்வு, கட்டுப்படியாகாத விற்பனை விலை ஆகியவற்றால் தீப்பெட்டி தொழில் நலிவை சந்தித்து வருகிறது. தற்போது கரோனா 2-வது அலை பரவலால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளோம். அடுத்து வரும் 14 நாட்களுக்கு ஊரடங்கு என்பதால் தீப்பெட்டி ஆலைகளை கதவடைப்பு செய்ய உள்ளோம். இதனால், தீப்பெட்டி தொழிலாளர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். தீப்பெட்டி உற்பத்தியும் நடைபெறாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x