Published : 09 May 2021 05:15 PM
Last Updated : 09 May 2021 05:15 PM
ரெம்டெசிவிர் மருந்து விற்பனையில் விடுமுறை எதற்கு என்று நோயாளிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மா.சுப்பிரமணியன், "சென்னை மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
இதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மே 8-ம் தேதி தொடங்கியது.
தலா 100 மில்லி கிராம் கொண்ட 6 ஊசிமருந்து அடங்கிய பேக்கிங் விலை ரூ.9.408. திருச்சி மாவட்டத்துக்கு 300 பேக்கிங் வந்த நிலையில், நேற்று 30 பேருக்கு தலா 6 ஊசி மருந்து அடங்கிய பேக்கிங் விற்பனை செய்யப்பட்டது. காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை ரெமிடெசிவிர் விற்பனை நடைபெற்றது. அதன்பிறகும் 20-க்கும் அதிகமானோர் ரெமிடெசிவிர் மருந்து வாங்க காத்திருந்தனர். அவர்களை நாளை வருமாறு மருந்து விநியோகம் செய்தவர்கள் கூறினராம்.
இந்தநிலையில், இன்று காலை ரெமிடெசிவிர் மருந்து வாங்க வந்திருந்த 50-க்கும் அதிகமானோரிடம், ஞாயிறன்று மருந்து விற்பனை கிடையாது அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனால், மருந்து வாங்க வந்தவர்கள் ஆத்திரமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தகவலறிந்து போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, மருந்து வாங்காமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று விடாப்பிடியாக கூறினர்.
இதுகுறித்து மருந்து வாங்க வந்தவர்கள் கூறும்போது, “மே 8-ம் தேதி மருந்து வாங்க வந்தபோது விற்பனை நேரம் முடிந்துவிட்டது என்றும் நாளை வருமாறும் கூறினர். இதையடுத்து, இன்று மருந்து வாங்க வந்தபோது, விடுமுறை என்று கூறுகின்றனர்.
உணவகங்கள், மளிகைக் கடைகள், காய்கனி சந்தைகள் திறக்க அனுமதி அளிக்கும் நிலையில், அத்தியாவசிய மருந்து விற்பனையில் விடுமுறை எதற்கு? இக்கட்டான கரோனா காலக்கட்டத்தில் எங்களை அலைக்கழிப்பது சரியல்ல. விடுமுறையின்றி போதிய அளவு ரெமிடெசிவிர் மருந்தை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கே.வனிதாவிடம் கேட்டபோது, “6 ஊசிமருந்து அடங்கிய ரெமிடெசிவிர் பேக்கிங் 300 எண்ணிக்கையில் வரப் பெற்றது. முதல் நாளான 8-ம் தேதி 30 பேருக்கு மொத்தம் 180 பேக்கிங் விற்பனை செய்யப்பட்டது. எஞ்சியவை இருப்பில் உள்ளன. ஞாயிறன்று மருந்து விற்பனை இல்லை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரெமிடெசிவிர் மருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT