Published : 09 May 2021 04:16 PM
Last Updated : 09 May 2021 04:16 PM
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று காரணமாக, இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3,000 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா 2-வது அலை நுரையீரலை பாதிக்கும் நோயானது மட்டுமில்லை, ஆபத்தான ரத்த உறைதலையும் ஏற்படுத்தும் நோயாக உருமாறி இருப்பதாக, மருத்துவ நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கொடிய நோய் தாக்கத்தில் இருந்து, மக்களை பாதுகாக்க மருத்துவத்துறையினர் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
கரோனா வைரஸுடன் மருத்துவத்துறையினர் நடத்தி வரும் போராட்டத்தில் சில நேரங்களில் மருத்துவத்துறையினர் தங்களது இன்னுயிரையும் இழந்து வருகின்றனர். அந்த வகையில், வேலூரைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர், கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, இன்று (மே 09) உயிரிழந்த சம்பவம் மருத்துவத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் செவிலியர் பிரேமா (52). அரசு மருத்துவமனைகளில் செவிலியராக 25 ஆண்டுகள் பணியாற்றி வந்த பிரேமா, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் கரோனா சிறப்பு வார்டில் பிரேமா பணியமர்த்தப்பட்டார். அங்கு இரவு, பகல் பராமல் கரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வந்த பிரேமாவுக்கு, கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலும், அதைத்தொடர்ந்து இருமல், சளி தொந்தரவும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கரோனா உறுதி செய்யப்பட்டதால், பிரேமா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இருப்பினும், கடந்த வாரம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட பிரேமா, உடனடியாக அவர் பணியாற்றி வந்த அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருந்தாலும், பிரேமாவின் உடல்நிலை நேற்றிரவு மிகவும் மோசடைந்தது. மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்து வந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி செவிலியர் பிரேமா இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த பிரேமாவுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT