Published : 09 May 2021 02:51 PM
Last Updated : 09 May 2021 02:51 PM

ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்க; எந்தச் சூழலிலும் ஆக்சிஜன் வீணாகக் கூடாது: அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, அமைச்சர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று (மே 09) காலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 11.30 மணியளவில் தொடங்கியது.

இக்கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 33 அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்வரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 09) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. தமிழகத்தில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்திட உள்ளது. இந்த ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

2. மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இந்த மருத்துவமனைகளில் உள்ள வசதிகளையும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான தரமான உணவு போன்ற வசதிகளை மேம்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

3. தமிழகத்தில் தற்போது பல நெருக்கடிகளுக்கிடையே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆக்சிஜன் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திடவும், எந்தவிதமான சூழலிலும் ஆக்சிஜன் வீண் போகக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

4. சென்னை மட்டுமின்றி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில், விற்பனையாவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5. தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிப் பயன்பாட்டை உயர்த்துவற்கு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி முனைப்பாக செயல்பட வேண்டும்.

6. மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் இத்துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி, அனைவரும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x