Published : 09 May 2021 12:52 PM
Last Updated : 09 May 2021 12:52 PM

கரோனா சிகிச்சைக்கு தருமபுரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சித்த மருத்துவ சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை

தருமபுரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 09), சென்னை, வியாசர்பாடியில் அமைந்துள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முறையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

அப்போது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"முதல்வரின் உத்தரவுக்கிணங்க இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் கடந்தாண்டு செயல்பட்டு வந்த சித்தா கோவிட் மையம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

240 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இம்மையத்தில் 195 நபர்கள் மிதமான அறிகுறிகளுடன் கோவிட் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்மையத்தின் மூலம் கடந்தாண்டு 2,290 நபர்கள் கோவிட் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இயற்கை முறை மருத்துவமனைகள் விரிவுபடுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி இம்மாதத்திற்குள்ளாக தமிழ்நாட்டில் தருமபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

மேலும், ஒருவாரத்திற்குள்ளாக தென்சென்னையில் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் சித்தா கோவிட் மையம் தொடங்கப்படவுள்ளது. மேலும், இயற்கை முறை மருத்துவத்தில் 1,410 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து, மேலும் பல இடங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உள்மருந்துகளாக கபசுரக்குடிநீர், அமுக்கராசூரண மாத்திரை, பிரம்மானந்தபைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு ஆகியவையும் வெளிமருந்துகளாக கற்பூராதி தைலம், பெயின்பாம் போன்றவைகளும், 'உணவே மருந்து' என்ற அடிப்படையில் தினமும் காலையில் சீரான குடிநீர், மாலையில் கரிசாலை பால், இரவில் சுக்கு கஞ்சி ஆகிய சிறப்பு மூலிகை வகை உணவுகள் நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புற சிகிச்சைகளாக காலையில் திறந்தவெளியில் சித்தர்யோகா, திருமூலர்பிராணாயாமம், வர்மசிகிச்சை சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவிசிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் ஒருங்கிணைந்த வகையில் நோயாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x