Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

தடுப்பூசி போடுவதால் ‘கரோனா’ வரவே வராது; மீறி வந்தால் தடுப்பூசி போடும் முன்பே தொற்று ஏற்பட்டிருக்கலாம்- நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் தகவல்

மதுரை

கரோனா தடுப்பூசி செலுத்துவதால் கரோனா வரவே வராது. அப்படி தடுப்பூசி போட்ட நேரத்தில் கரோனா வந்தால் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், இறப்புகளைத் தடுக்கவும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

கரோனா முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் விவேக் மரணத்துக்குப் பின்னர், மக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கும், ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 2-வது ஊசி செலுத்திக் கொள்வதிலும் தயக்கம் காட்டுகின்றனர். அதையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வந்தாலும், பக்க விளைவுகள் பற்றிய பயம் அதிகரித்துள் ளதால், மக்களிடம் இன்னும் தடுப்பூசி பயம், தயக்கம் குறைய வில்லை.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சல், உடல்வலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது. அது சில நாட்களில் சரியாகிவிடுகிறது. ஆனால், சிலருக்கு தொடர்ந்து 6 நாட்களுக்கு மேல் காய்ச்சல், உடல்வலி ஏற்படுவதால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து பார்த்தால் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ‘பாசிட்டிவ்’ காட்டுகிறது.

அதனால், கரோனா தொற்றோ அல்லது அதன் புரோட்டீனோ வைத்து தடுப்பூசி செலுத்துவதால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்தாலே பாசிட்டிவ் காட்டுமா என்றும், அதனாலே ‘கரோனா’ தொற்று ஏற்பட்டவர்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் தடுப்பூசி போடுகிறவர்களுக்கும் வருகிறதா என்ற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்மருத்துவர் இளம்பரிதி கூறிய தாவது:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் தொற்று வரவே வராது. அப்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டவுடன் ஏற்படும் தொந்தரவுகளால் பரிசோதனை செய்யும்போது சிலருக்கு கரோனா வந்தால், அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சில நாட்களுக்கு முன்பே கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும்.

கோவிஷீல்டு தடுப்பூசி முதல்டோஸ் போட்ட பிறகு 2 மாதம்கழித்து 2-வது டோஸ் போட வேண்டும். அதுபோல், கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 30 நாட்கள் கழித்து 2-வது டோஸ் போட வேண்டும். தடுப்பூசி போட்டவுடனே கரோனா நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடாது.

2-வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒரு மாதம் கழித்தே கரோனா வைரஸின் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்படும். அதனால், தடுப்பூசி போட்டவுடன் பரிசோதனை செய்தாலே கரோனா பாசிட்டிவ் என்று காட்டுவதற்கு வாய்ப்பே இல்லை.

வைரஸின் புரோட்டீன்

மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனா வரவே வராது என்று கூற முடியாது. கரோனா தொற்று ஏற்பட்டால் அதன் தீவிரத் தன்மை குறையும். இறப்பு நிலையில் இருந்து தப்பிக்கலாம். கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும்போது அதில் அதன்வைரஸ் இருக்காது. கரோனா வைரஸின் ஸ்பைக் (spike) புரோட்டீன்தான் அந்த தடுப்பூசியில் வைத்து உடலில் செலுத்தப்படுகிறது. அந்த வைரஸின் குறிப்பிட்ட புரோட்டீன் மட்டுமே இருக்கும்.

அதுபோல், கோவேக்சின் தடுப்பூசியில் இன் ஆக்டிவ் (inactive) வைரஸ் மட்டுமே வைத்து செலுத்தப்படுகிறது.

தொற்று ஏற்பட்டு கரோனா வைரஸ் உடலில் வரும்போதுதான், அந்த வைரஸ் செயல்படத் தொடங்கும். பொதுவாக தடுப்பூசி போட்டுக் கொண்டால் 48 மணி நேரம் மட்டுமே காய்ச்சல், மற்றதொந்தரவுகள் ஏற்படும். அப்படிஇருந்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.

தடுப்பூசி வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்பது அர்த்தம். அதற்கு மேல் காய்ச்சல், மற்ற தொந்தரவுகள் நீடித்தால் அவர்கள் கண்டிப்பாக முதலில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அது தடுப்பூசி போடுவதினால் வரக்கூடிய தொந்தரவு கிடையாது. வேறு காரணங்களால் அந்த தொந்தரவுகள் வந்திருக்கும். அப்படி தடுப்பூசி போட்ட சில நாளில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு தடுப்பூசி போட்ட நேரத்தில் தொற்று இருந்துள்ளது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x