Published : 20 Dec 2015 05:19 PM
Last Updated : 20 Dec 2015 05:19 PM
சவுதி அரேபிய எல்லையில் ஏமன் படையினரும், கிளர்ச்சிப் படைக்கும் நடைபெற்ற சண்டையில் 2 தமிழர்கள் உள்பட 75 பேர் பலியானார்கள்.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி ஆதரவு படைகளுக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் ஏமன் அதிபர் அதிபர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம் ஹவுத்தி கிளர்ச்சிப் படை மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
தற்போது ஏமனின் பெரும்பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏமனின் உள்நாட்டுப் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதால் ஐ.நா. சபை சார்பில் அவசர நிலை 3-ம் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஹைதி, சவுதியில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் துறைமுக நகரான ஏடனை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை சவூதி அரேபியா-ஏமன் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி ஏமன் படையினரும், கிளர்ச்சியாளர்களும் மாறி மாறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியத்தில் இரு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் வரை பலியாகி இருக்கின்றனர்.
இதில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது. உயிரிழந்த இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 தமிழர்கள் பலி
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்தவர் முகம்மது கில்மி (48) கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியாவின் எல்லை பகுதிதியில் உள்ள நசீரான் என்ற இடத்திலுள்ள உணவகத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரகத் நிஷா, மகன் வாசிம் அக்ரம், மகள் அம்ஷத்நிஷா ஆகியோர் ஏர்வாடியில் வசித்து வருகின்றனர்.
சனிக்கிழமை மாலை சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நசிரான் பகுதியில் ஏமன் நாட்டு கிளர்ச்சிப் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகம்மது கில்மி உயிரிழந்தார். இதனை சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் கில்மியின் மைத்துனர் அப்பாஸ் அலி உறுதிபடுத்தியுள்ளார். முகம்மது கில்மியின் உடலை அவரது உறவினர்கள் சவுதியிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
எட்டு மாதங்களுக்கு முன்னர் விடுமுறைக்கு தாயகம் வந்து விட்டு சவூதி திரும்பிய முகம்மது கில்மி ஏமன் கிளர்ச்சிப் படை தாக்குதலில் உயிரிழந்திருப்பது ராமநாதபுரம் மாவட்டத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி என்பவரும் பலியாகியுள்ளார்.அந்தோணி பற்றிய முழு விவரம் தெரியாததால் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT