Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM
தென்காசி/திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழைபெய்தது. வானம் மேகமூட்டமாகவே இருந்ததால் அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து மக்கள் தப்பித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில், அடவிநயினார் அணையில் 9 மிமீ, கருப்பாநதி அணையில் 4, செங்கோட்டையில் 1 மிமீ மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தென்காசி, புளியங்குடி, பாவூர்சத்திரம், கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாதால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்படவில்லை. கடனாநதி அணை நீர்மட்டம் 66.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 55.37 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 49.36 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணைதொடர்ந்து வறண்டு கிடக்கிறது.வறண்டு கிடந்த குற்றாலம் அருவியில் தொடர் மழையால் சிறிதளவுநீர் வரத்து ஏற்பட்டது. கரோனாபரவல் காரணமாக அருவியில்குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை நிலவரப்படி 2 மி. மீ மழை பதிவாகியிருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 56.94 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 254.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 87.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 42.69 அடியாக இருந்தது. அணையிலிருந்து 5 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 52.25 அடிஉச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 5 அடியாக சரிந்திருந்தது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த அணை வறண்டுவிடும் நிலையுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நேற்று காலைஇடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரம் விட்டு விட்டு மழை பெய்தது.மழையால் சாலைகளில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கியது. பிரையண்ட் நகர், பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதி சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நிறைவு பெறாததால், ஒருவழியாக மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதிலும் மழைநீர் தேங்கி சகதிக்காடாக மாறி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், மழைக்கு தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள டீக்கடை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதன் அருகே நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சாமிநாதன்(65), வினோத்(27) உள்ளிட்ட 3 பேர் காயம்அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள்சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த 3 பேரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சிவலோகத்தில் (சிற்றாறு 2) 33 மிமீ., மழை பதிவானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளித்தது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையும், மலையோரப் பகுதிகளிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
சிற்றாறு ஒன்றில் 26 மிமீ.,மைலாடியில் 28, பேச்சிப்பாறையில் 23, நாகர்கோவிலில் 10, தக்கலையில் 13, ஆரல்வாய்மொழியில் 10 மிமீ., மழை பதிவாகினது. மலையோரங்களி்ல பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 130 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 56 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 54.15 அடியாக உள்ளது. பொய்கையில் 17.10 அடி, மாம்பழத்துறையாறில் 14.60, சிற்றாறு ஒன்றில் 7.02, சிற்றாறு இரண்டில் 7.12 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT