Published : 08 May 2021 07:54 PM
Last Updated : 08 May 2021 07:54 PM
தமிழக முதல்வராக நேற்று (மே 07) பதவியேற்ற மு.க.ஸ்டாலின், 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், பெண்களுக்கான திட்டம் என்றாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்பது.
அந்த உத்தரவில், "தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம், இன்று (மே 08) முதலே நடைமுறைக்கு வந்தது. முன்னதாக, நேற்று இரவே எந்தெந்த பேருந்துகளில் இலவசம் என்பது பெண்களுக்குப் புரியும் விதமாகவும், குழப்பத்தைத் தவிர்க்கும் விதத்திலும், நகரப் பேருந்துகளில், 'மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை' என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.
இன்று தமிழகம் முழுவதும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தவுடன், "பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவசப் பேருந்து பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்" என ட்விட்டரில் ஊடகவியலாளர் இந்துஜா ரகுநாதன் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கருணாநிதி காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.
மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.
தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.
பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும். https://t.co/NSxVBP6nzJ— M.K.Stalin (@mkstalin) May 8, 2021
இதனிடையே, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய திருநங்கைகள், தங்களுக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் வரை மிச்சம் ஆவதாக நன்றி தெரிவித்த சம்பவமும் நடைபெற்றது.
பேருந்துகள் பயணம் செய்ய பயன்படும் வாகனம் என்பதைக்கடந்து, தமிழக வரலாற்றில் அதற்கென முக்கிய பங்குண்டு. பயணத்தைக் கடந்து அதன்மூலம் நிகழும் மாற்றமே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பது பொருளாதாரம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, கல்வியையும் சம்மந்தப்படுத்தியது. இலவச பஸ் பாஸ் கிடைத்தால், பணத்துக்கு வழியில்லாமல் பள்ளிக்கூடம் செல்ல முடியாத அடித்தட்டு மாணவன் பள்ளிக்குச் செல்வான் என்பதே அத்தகைய திட்டங்களின் பயன்.
தவிர்த்து, தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட ஒப்பிடுகையில், அனைத்து கிராமங்களுக்கும் இடையிலான பேருந்து தொடர்பு மேம்படுத்தப்பட்டுள்ளதன் விளைவு, பெண்கள் பணிக்கு செல்வது, பாதுகாப்புடன் பயணிப்பது போன்றவை .
இருந்தாலும், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தமிழக அரசு உள்ளபோது, நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது, கரோனா காலத்தில் தேவையற்ற செலவு, தவிர்த்திருக்கலாம், இதன்மூலம் பெண்கள் என்ன செய்ய முடியும் என்ற விமர்சனங்களையும் பார்க்க முடிகிறது.
இந்த விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் அறியும் விதமாக, முதல் நாளில் பேருந்துகளில் இலவசமாக பயணித்த பெண்கள் சிலரிடம் 'இந்து தமிழ் திசை' சார்பாக பேசினோம்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா, வீட்டு வேலை செய்துவருகிறார். இத்திட்டத்தின்மூலம் தனக்கு மாதம் ரூ.600 வரை மிச்சமாகும் எனக்கூறுகிறார்.
"பெண்களுக்கு முதல்வர் முன்னுரிமை கொடுத்து இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவருக்கு நன்றி. முதல்நாளில் இன்று இலவசமாக பயணம் செய்தோம். டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆத்தூரிலிருந்து காந்திகிராமத்திற்கு வீட்டு வேலைக்கு செல்கிறேன். கரூரிலிருந்து வேலூர் செல்லும் பேருந்தில் செல்வோம். அந்த பேருந்து வரவில்லையென்றா,ல் நாங்கள் ஆத்தூர் வந்துதான் செல்ல வேண்டும். மாதம் எனக்கு ரூ.3,500 தான் சம்பளம். கணவர் விவசாயக்கூலியாக இருக்கிறார். அவருக்கு தினமும் ரூ.200-300 கூலி கிடைக்கும். மகனுக்கும் சரியான வேலை இல்லை.
என்னுடைய சொற்ப வருமானத்தில் வேலைக்கு சென்று வருவதற்கு தினமும் 20 ரூபாய் செலவாகும். 30 நாட்களும் வேலைக்கு செல்ல வேண்டும். விடுப்பெல்லாம் கிடையாது. இதனால், பேருந்து செலவுக்கே மாதத்திற்கு ரூ.600 செலவாகும்.
இதனால் பசித்தால் டீ, வடை கூடவாங்கி சாப்பிட முடியாது. அந்த பணத்தை பேருந்து கட்டணத்துக்குப் பயன்படுத்தலாம் என்றுதான் தோன்றும். பெண்களுக்கு இந்த திட்டம் மிகவும் நன்மை தரக்கூடியது. இதில், மிச்சமாகும் பணத்தின்மூலம் அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம். இதில் மிச்சமாகும் பணத்தில் சிறு சிறு செலவுகளை சமாளிக்கலாம்.
இந்த திட்டத்தை பணம் உள்ளவர்கள்தான் தேவையில்லாதது, அநாவசியமானது என சொல்வார்கள். காசு இல்லாதவர்களுக்கு இது நல்ல திட்டம்தான்.
பேருந்து வசதிகளை இன்னும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும். மாலையில் பேருந்துகள் தாமதமாவதை சரிசெய்ய வேண்டும்" என்றார்.
வேலூரை சேர்ந்த லஷ்மி, கேண்டீன் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பேருந்து செலவில் மிச்சப்படுத்தும் பணத்தின்மூலம் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு சிறியளவில் சேமிக்கலாம் என்கிறார்.
"வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் கேண்டீனில் ஊழியராக உள்ளேன். தினக்கூலிதான். வேலையை பொறுத்து ரூ.200-250 வரை தினமும் கிடைக்கும். தினமும் பேருந்தில்தான் பயணம் செய்வோம். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் கண்ணமங்கலத்திலிருந்து வேலூர் வந்து, ஆட்சியர் அலுவலகம் செல்ல இன்னொரு பேருந்தில் செல்ல வேண்டும். ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். பேருந்துக்கு என தினமும் ரூ.50-60 வரை செலவு செய்ய வேண்டும். ரூ.1,250 வரை மாதம் இதற்கென செலவு செய்ய வேண்டி வரும்.
எங்களை மாதிரியான அடித்தட்டு பெண்களுக்கு இது பேருதவியாக இருக்கும். இதன்மூலம் மிச்சப்படுத்தி பிள்ளைகளின் கல்விக்காக ஏதேனும் சேர்த்துவைக்கலாம்.
மாலை நேரத்தில் பயணம் செய்வது கொஞ்சம் அச்சத்தைத்தரும். அதனை நான் அதிகம் அனுபவித்திருக்கிறேன். இதனை தவிர்க்க, மாலை நேரத்தில் பேருந்துகளை அதிகமாக இயக்க வேண்டும். பேருந்துகளுக்கு அதிக நேரம் காக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஷேர் ஆட்டோவுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, காலையில் பணி நேரத்தின்போதும் அதிக பேருந்துகள் விட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இவர்கள் தவிர, மீனவப் பெண்கள், விவசாயப் பெண்களுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
நாகை மாவட்டம் வானகிரியை சேர்ந்த மீனவப்பெண் பார்வதி கூறுகையில், "மீனவப் பெண்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும். வானகிரியிலிருந்து மயிலாடுதுறை சென்று அங்கு மீன்களை விற்பனை செய்வோம். பேருந்துகளில் காலை செல்லுமோது மீன்கூடைக்கு என ரூ.50 வசூலிப்பார்கள். மாலையில் மீண்டும் வரும்போது ரூ.18 டிக்கெட், ஆனால் நாங்கள் ரூ.20 கொடுக்க வேண்டும். ஆனால், இன்று எங்களிடம் மாலையில் டிக்கெட் வாங்கவில்லை. இது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
நகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், இத்திட்டம் இன்னும் வலுவானதாக இருக்கும் என்பதே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் எண்ணமாக இருக்கிறது.
"நான் ஆடிட்டரிடம் பணிபுரிகிறேன். செந்துறையிலிருந்து அரியலூர் வர வேண்டும். எனக்கு ரூ.7,000 மாதச்சம்பளம். ஒரு நாளுக்கு பேருந்துக்கென ரூ.16 செலவு செய்கிறேன். ரூ.16 என்றால் சாதாரணமாக இருக்கும். ஆனால், மாதத்திற்கு கணக்கெடுத்தால் அந்த செலவு எங்களுக்கு மிச்சம்தான்.
எனினும், எங்கள் பகுதியில் நகரப் பேருந்துகள் குறைவாகத்தான் இருக்கின்றன. இன்னும் பேருந்துகளை அதிகரிக்க வேண்டும். ஒரு குக்கிராமத்தில் கூட நகரப்பேருந்து நிற்கும். நகரப் பேருந்துகளை அதிகப்படுத்தினால் இந்த திட்டம் இன்னும் 'பவர்ஃபுல்'லாக இருக்கும்" என வலியுறுத்துகிறார் அனிதா.
பண சேமிப்பு என்பதைக் கடந்து சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பெண்கள் முன்னேற்றம் அடைய இத்திட்டம் துணைபுரியும் என்கிறார், 'தமிழ்நாடு வுமன் கலெக்டிவ்' (Tamilnadu Women Collective) அமைப்பின் நிறுவனர் ஷீலு.
"கீழ்மட்டத்தில் இருக்கும் பெண்கள், அமைப்புசாரா பெண்களுக்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். சென்னையில் பார்த்தோமானால் காலையில் பூ விற்பவர்கள், காய்கறி விற்பவர்கள் பிராட்வேக்கும், கோயம்பேட்டுக்கும் பேருந்தில் செல்வார்கள். அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் பெரும்பாலும் ரூ.1,000 பேருந்து பாஸ் வைத்திருப்பார்கள். அந்த பணத்தை இனி உபயோகமான மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்துவார்கள்.
ரேஷன் கடைக்கு செல்பவர்கள் ஷேர் ஆட்டோவுக்கு செலவு செய்ய முடியாமல் தலையில் பொருட்களை தூக்கிவைத்துக்கொண்டு செல்வார்கள். இனி, பேருந்தில் ஏற்றிச்செல்வார்கள்.
விவாகரத்து வழக்கு தொடுத்த ஒரு பெண் இன்றைக்கு என்னிடம் பேசினார், அப்போது, 'கணவர் நீதிமன்றத்துக்கே வராமல் அலைக்கழிக்கிறார், என்னால் பேருந்து, ஆட்டோக்களுக்கு செலவு செய்ய முடியவில்லை. இனி அப்படியில்லை. எல்லா வாய்தாவுக்கும் நான் நீதிமன்றத்துக்கு சென்று எனக்காக நிற்பேன்' எனத் தெரிவித்தார்.
ஒரு இடத்திற்கு காசு இல்லாமல் செல்ல முடியாமல் முடங்கிக்கிடக்கும் பெண்கள், இனி வெளியில் செல்வார்கள். அதுவே முன்னேற்றத்திற்கான வழிதான் " என ஷீலு தெரிவித்தார்.
2020 ஏப்ரல் முதல் 2020 டிசம்பர் வரை இந்திய பொருளாதார கண்காணிபுக் குழு நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பெண்களுள் 19% பெண்கள்தான் மீண்டும் வேலைக்கு செல்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், சம்பளத்தில் குறைவு போன்ற காரணங்களால், மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்த பெண்களும் உள்ளனர்.
இத்தகைய சூழலில், இத்திட்டம், மீண்டும் பெண்களை பணிகளுக்கு செல்ல வழியமைக்கும், நீண்டகால மாற்றத்தையும் சேமிப்பையும் உருவாக்கும் என்பதே நம்மிடம் பேசிய பெண்களின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. மேலும், ஒருமாத பால் செலவு, மளிகை செலவு போன்றவற்றுக்கு இந்த பணத்தை பயன்படுத்துவோம் என பெண்கள் கூறியுள்ளது மிகையானது அல்ல.
பேருந்து கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைந்தும், கடைசி குக்கிராமம் வரை பேருந்து இணைப்பை வலுப்படுத்தியும் திட்டத்தை மேலும் வலுவானதாக்க வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT