Published : 08 May 2021 06:23 PM
Last Updated : 08 May 2021 06:23 PM
புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சிவா எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுக 13 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் புதுமுகங்கள் போட்டியிட்டனர். இதில், உப்பளம், முதலியார்பேட்டை, வில்லியனூர், பாகூர், காரைக்கால் தெற்கு, நிரவி திருப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகளை திமுக கைப்பற்றியது.
இவற்றில், திமுக தெற்கு மாநிலத்துக்குட்பட்ட பகுதியில் 4 பேர் வென்றனர். குறிப்பாக, புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, வில்லியனூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 6 தொகுதிகளை பிடித்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியின் எதிர்க்கட்சி தலைவராக யார் செயல்படுவார் என்பது குறித்து திமுக தலைமை முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சிவா எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (மே 08) வெளியிட்ட அறிவிப்பில், "நடைபெற்று முடிந்த புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவா எம்எல்ஏ, புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக அறிவிக்கப்படுகிறார்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT