Published : 08 May 2021 03:27 PM
Last Updated : 08 May 2021 03:27 PM
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 'ரெம்டெசிவிர்' ஊசி மருந்து விற்பனை இன்று (மே.8) தொடங்கியுள்ளது.
கரோனா தொற்றால் சென்னையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவையிலும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதால், கிசிச்சைக்கான மருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு உள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் பலர் மருந்தைத் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்ட்டரில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, "100 எம்ஜி ரெம்டெசிவிர் (1 வயல்) மருந்து ரூ.1,568 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 6 வயல்களைப் பெற்றுக்கொள்ளலாம். மருந்து வாங்க வேண்டுமெனில் கரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) செய்துகொண்டதற்கான சான்று, சி.டி.ஸ்கேன் பரிசோதனை சான்று, மருத்துவரின் பரிந்துரை (அசல்), நோயாளியின் ஆதார் அட்டை அசல், நகல், மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அட்டை அசல், நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
தற்போது ஒரு நாளைக்குச் சராசரியாக 83 நோயாளிகளுக்கு வழங்கத் தேவையான மருந்தை (500 வயல்) அளித்துள்ளனர். கூடுதலாக அளித்தால் விநியோகமும் அதிகரிக்கப்படும். தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விற்பனை மையம் செயல்படும். எனினும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விற்பனை மையத்தில் கூட்டம் கூடாமல், வரிசையில் நின்று மருந்து வாங்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
யாருக்குப் பயன்படும்?
ரெம்டெசிவிர் மருந்துப் பயன்பாடு குறித்து மருத்துவர்கள் கூறும்போது, “ரெம்டெசிவிர் என்பது கரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த அவசர காலத்துக்கு மட்டும் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள, பரிசோதனை அளவிலான மருந்தாகும். இது, கரோனா தொற்றிலிருந்து உயிர் காக்கும் மருந்தாக இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை.
தீவிரமல்லாத, சாதாரண பாதிப்பு உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, தேவைப்படும் இன்னொருவரது வாய்ப்பைப் பறிப்பதற்கு இது வழிவகுக்கும். டெம்டெசிவிர் மருந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையில் உள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மருந்தை வீட்டில் பயன்படுத்தவோ, பதுக்கி வைக்கவோ வேண்டாம்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT