Published : 08 May 2021 02:17 PM
Last Updated : 08 May 2021 02:17 PM
சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம் என அறிவித்திருந்த நிலையில் திருநங்கைகளும் கட்டணம் வசூலிக்கப்படாதது மகிழ்ச்சி அளிப்பதாக திருநங்கைகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை அடுத்து முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்கக் கட்டணம் இல்லை என அரசு அறிவித்ததை அடுத்து, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 95 தஞ்சை நகரப் பேருந்துகள், 230 தஞ்சை மாவட்டப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராமப் புறங்களில் இருந்து கடைகளுக்கு மற்றும் நிறுவனங்களுக்குக் கட்டிட வேலைக்குச் செல்லக்கூடிய பெண்கள் தினமும் தங்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மிச்சமாகும் எனவும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இந்தச் சலுகை மிகப் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறும் திருநங்கைகள், தங்களுக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் வரை மிச்சம் ஆவதாக நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தமிழக அரசு கரோனா நிவாரணத் தொகையாக அரிசி அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது. திருநங்கைகள் பெரும்பாலானோருக்குக் குடும்ப அட்டை இல்லாத நிலையில், திருநங்கை நல வாரியம் மூலம் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணத் தொகையைத் தங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT