Published : 08 May 2021 01:54 PM
Last Updated : 08 May 2021 01:54 PM

கட்டபஞ்சாயத்து, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் பேட்டி

சென்னை

காவல் ஆணையராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பதவி ஏற்றார். இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றப்பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:

“நான் சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளேன், இன்றைய சூழ்நிலையில் கரோனாவுக்கு எதிராக போலீஸார் முன்களப்பணியாளர்களாக அனைவருக்கும் உதவும் வகையில் செயல்படுகிறார்கள்.

அனைத்து வகையிலான பதவியில் இருக்கும் போலீஸார் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு முதல் முன்னுரிமையாக இருக்கும்.

அடுத்தக்கட்ட முன்னுரிமை முதல்வரின் நம்பிக்கையை நிறைவேற்றும் வண்ணம், முதல்வரின் சிறந்த ஆட்சிக்கு உதவும் வண்ணம் செயல்படுவோம். சென்னை காவல்துறை சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவோம். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

2 வார முழு ஊரடங்கில் அரசு வழிகாட்டு முறைகளை கொடுத்துள்ளார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு வராவண்ணம் முழு ஊரடங்கில் மக்கள் வெளியே வராவண்ணம் பாதுகாப்பு அளிப்போம். கரோனா தொற்றால் பாதிக்கப்படும் போலீஸார் குறித்து என் கவனத்துக்கு வந்துள்ளது. மகேஷ்குமார் அகர்வாலிடம் பேசிக்கொண்டிருந்தேன். போலீஸார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதையும் தாண்டி புதிய வழிகாட்டுதல் கொண்டுவர உள்ளோம், போலீஸாருக்கு சிறிய அறிகுறி தெரிந்தாலும் அவர்களுக்கு பரிசோதனை. தொற்று உறுதியானால் தனிமைப்படுத்துதல் வீடு அல்லது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்போம். தனிமையில் இருக்கும் போலீஸாரிடம் தொடர்ந்து தைரியம் அளிக்கும் வகையில் பேசுவோம். கண்டிப்பாக மாற்றம் வரும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம், ஊரடங்கில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள், அவர்களுக்கான அத்யாவசிய பொருட்கள் தேவைப்படும் அதற்கான நடவடிக்கைகளும் எடுப்போம். நாங்கள் முன் களப்பணியாளர்கள். எங்கள் காவல்துறையினரின் நலனும் முக்கியம். 3000 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலனை முக்கியமாக யோசிப்போம். அதேப்போன்று பொதுமக்கள் நலன்.

ஊரடங்கு சரியாக நடக்க வேண்டும். அத்யாவசிய மருத்துவ அவசியமான செயல்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அரசாங்கம் பெரிய அளவில் இதுகுறித்த வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்கள். அதை நடைமுறைப்படுத்த கண்டிப்பாக முயற்சிப்போம்.

கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடன் நடவடிக்கை எடுக்கப்படும். நான் போதை பொருள் கடத்தல் பிரிவில் பணியாற்றியுள்ளேன். ஆகையால் கடும் நடவடிக்கை எடுத்து முழுமையாக கட்டுப்படுத்துவோம்.

ஊரடங்கில் பொதுமக்கள் வெளியில் வருவார்கள், அவர்களிடம் கடுமையாக நடக்க முடியாது. அவர்களுக்கு அறிவுரை சொல்லி வெளியில் வருவதை கட்டுப்படுத்துவோம். ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க தடையில்லை. ஆன்லைன் மூலம் தாராளமாக புகார் அளிக்கலாம்.

அதை நாங்க கண்டிப்பாக செய்வோம். அது இல்லாமல் போனிலும் புகார் அளிக்கலாம், காவல் நிலையங்களிலும் அளிக்கலாம். முன்னர் வீடியோ கால் மூலம் காவல் ஆணையர் பொதுமக்கள் புகாரை பார்த்தது குறித்து கேட்டறிந்து அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று பார்க்கிறேன்”.

இவ்வாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x