Published : 08 May 2021 12:39 PM
Last Updated : 08 May 2021 12:39 PM
மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 08) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"ரெம்டெசிவிர் மருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அது பிரித்து விற்கப்பட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பதற்கு உண்டான வழிகளை ஏற்படுத்தி, மருந்துகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு கரோனாவுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சை அளிக்க முதல்வர் அறிவித்துள்ளார். விலை நிர்ணயம் குறித்த விளக்கம் மருத்துவத்துறையினரால் இன்று மாலை வெளியிடப்படும்.
முழு ஊரடங்கின்போது மருத்துவ சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போடுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறும்.
ஆம்புலன்சில் வரும் நோயாளிகளை விரைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்த மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாய்வு நடத்தி, தீவிரமல்லாத நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சையை பயன்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்களை புதைக்கவோ, எரிக்கவோ உறவினர்கள் காத்திருப்பது போன்றவை, வட இந்திய பத்திரிகைகளில் உள்ள செய்திகள். தமிழகத்தில் அந்த நிலை இல்லை, வரவும் வராது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT