Last Updated : 19 Dec, 2015 12:00 PM

 

Published : 19 Dec 2015 12:00 PM
Last Updated : 19 Dec 2015 12:00 PM

புதுப்பொலிவுக்குத் தயாராகும் ‘ஹாமில்டன் போலீஸ் கிளப்’: பழமை மாறாமல் புனரமைக்க காவல்துறை திட்டம்

கோவையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ‘ஹாமில்டன் போலீஸ் கிளப்’ கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைக்க, மாநகர போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான முதல் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.

கோவை நகரில் வரலாற்று நினைவுகளாக பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று ரயில் நிலையம் எதிரே உள்ள ‘ஹாமில்டன் போலீஸ் கிளப்’. 3488 சதுர அடி பரப்பளவில் (சுமார் 85 சென்ட்) போலீஸ் கிளப் பங்களாவும், அதனுடன் கூடிய கிணறு ஒன்றும் இந்த வளாகத்தில் இருந்தது. 1918-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி எப்.ஏ.ஹாமில்டன் என்ற ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி விலைக்கு வாங்கியுள்ளார். அதன் பிறகு காவல்துறை அதிகாரிகள் தங்குவதற்கான இடமாக இக்கட்டிடம் செயல்பட்டது.

நூற்றாண்டு பழமையான இந்த கட்டிடம், கடந்த பல வருடங்களாக போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது. இதே வளாகத்தில் 1951-ல் கட்டப்பட்ட ‘ஹார்வி பிளாக்’ கட்டிடம், வணிகக் கடைகளுக்காக மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவின் பேரில், இந்த ‘ஹாமில்டன் போலீஸ் கிளப்’ கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் தொடங்கி யுள்ளன. முதற்கட்டமாக புனரமைப்பதற்கு ஆகும் செலவு குறித்த மதிப்பீட்டிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு சில மாதங்களில் மொத்தப் பணிகள் முடிவடைந்து, காவல் துறையினரின் பயன்பாட்டுக்கு இந்த கிளப் கட்டிடம் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.20 ஆயிரம்

பழமையான ‘ஹாமில்டன் போலீஸ் கிளப்’ குறித்து போலீஸார் கூறும்போது, ‘இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1918-ல் இம்பீரியல் பேங்க் சாலை என்ற முகவரியில் இருந்த இந்த கட்டிடம் ரூ.20 ஆயிரம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் காவல்துறை அதிகாரிகள், உதவி ஆய்வாளர்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகள் பயன்பாட்டுக்காக இந்த கிளப் தொடங்கப்பட்டது. அப்போதே மெட்ராஸ் பேங்க் எனப்படும் வங்கிக்கு காசோலை செலுத்தி இந்த கட்டிடம் விலைக்கு வாங்கப் பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஹாமில்டன் துரையுடன் அற்புதசாமி பிள்ளை, டிகே கிருஷ்ணசாமி பிள்ளை, ஹம்பிரீஷ் துரை ஆகியோர் இதை நிர்வகித்து வந்துள்ளனர். பின்னர் இந்த போலீஸ் கிளப்பில் ஊத்துக்குளி ஜமீன், ஊத்துக்குளி சின்ன ஜமீன், சமத்தூர் ஜமீன், எஸ்.எல்.சுப்பாராவ், மத்திபாளையம் வில்லேஜ் முன்சீப் குப்பண்ணகவுண்டர், ஈரோட்டைச் சேர்ந்த முத்துராமன் செட்டியார், கோவை டி.கிருஷ்ணா செட்டியார், உடுமலை மலையாண்டிச் செட்டியார், வேலம்பாளையம் முத்துக்குமாரச் செட்டியார், கள்ளிப்பட்டி மாரப்பகவுண்டர், கோவை ஆர்.கே.சண்முகம் செட்டியார் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்), சுண்டக்காமுத்தூர் ஆறுமுகம் பிள்ளை, வெள்ளக்கிணறு வி.சி.வெள்ளிங்கிரி கவுண்டர், கான் பகதூர் எம்.அமினுதீன் சாஹிப் பகதூர் உள்ளிட்டோர் இந்த கிளப்பின் நிர்வாகத்தில் இருந்துள்ளனர்.

பொறியியல் நுணுக்கம்

இந்த கிளப் கட்டிடத்துக்குள் சுமார் 16 அறைகள், டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம், பெரிய சமையலறை என சகல வசதிகளும் உள்ளன. இதற்கென எழுதப்பட்ட விதிமுறைகள் கூட உள்ளன. அதற்கான ஆவணங்கள் பல சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன. நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் சட்டப் புத்தகங்களும் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 2 அடி தடிமனுள்ள சுவர்கள், 12 அடி உயரம் கொண்ட அறைகள், காற்றோட்டமிக்க கட்டமைப்பு என நுணுக்கமான பொறியியல் தொழில்நுட்பம் இந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை அப்படியே புனரமைக்க உள்ளோம்’ என்றனர்.

மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் கூறும்போது, ‘கோவை ரயில் நிலையம் எதிரே, காவல்துறை அதிகாரிகளுக்காக கட்டப்பட்ட வரலாற்று பழமைமிக்க ‘ஹாமில்டன் கிளப்’ கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. பல வருடங்களாக பராமரிப்பின்றி இருப்பதால் பணிகளை பொறுமையாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. எக்காரணம் கொண்டும் கட்டிட வடிவத்தையும், பழமையையும் சிதைக்காமல் பணிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தங்குவதற்கு இந்த கட்டிடம் பயன்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x