Published : 07 May 2021 10:32 PM
Last Updated : 07 May 2021 10:32 PM
அதிமுக தலைமையகத்தில் நடந்த அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டமானது எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. ஒற்றைத் தலைமை கோஷத்தை முன்வைத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த வாக்குவாதத்தால் முடிவு எட்டப்படாமல் போனதாகத் தெரிகிறது.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனியே 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளான பாமக, பாஜக மொத்தம் 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் யார் என்பதைத் தேர்வு செய்வதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
யாரை எதிர்க்கட்சித் தலைவராக்குவது என்பதில், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், 4 மணி நேரமாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சட்டபேரவைக் குழு தலைவரை தேர்வு செய்யப்படாமல் நிறைவடைந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கூட்டத்தின்போது, ஈபிஎஸ்ஸின் தவறான தேர்தல் வியூகங்களால் தான் அதிமுக தோல்வியடைந்ததாக ஓபிஎஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மேலும், அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு வரும் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதனையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்னும் சில எம்எல்ஏக்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT