Published : 07 May 2021 09:46 PM
Last Updated : 07 May 2021 09:46 PM
தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முனைவர் கோவி.செழியன், திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் தனி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கோவி.செழியன். இவர் கடந்த 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2ம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் 3 சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணி முன்னிலை வகித்தார். ஆனால், 4-வது சுற்று முதல் 26-வது சுற்றுவரை தொடர்ந்து கோவி.செழியன் முன்னிலையில் இருந்து, 10,680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் திமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.
மும்முறை வென்றவருக்கு முத்தாய்ப்பாக அரசின் தலைமைக் கொறடா பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT