Published : 07 May 2021 09:33 PM
Last Updated : 07 May 2021 09:33 PM

தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உடனடியாக கூடுதல் ஆக்சிஜனை வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதும் முதல் கடிதம் இதுவாகும்.

அக்கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

நான் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றமைக்கு தாங்கள் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. முதல்வராகப் பதவியேற்றவுடன் மருத்துவ நிபுணர்கள், தமிழக மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் கரோனா நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

இத்தருணத்தில் தமிழகத்தில் நிலவும் தீவிர மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்துக்கு தினமும் 440 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இது மேலும் 400 மெட்ரிக் டன் அதிகரித்து அன்றாடத் தேவை 840 மெட்ரிக் டன் அளவாக உயர வாய்ப்புள்ளது.

இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக, தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன் என உள்ளது. இது நிச்சயமாக தேவையைப் பூர்த்தி செய்யாது.

அதனால் கடந்த மே 1, 2ல் அரசு அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் தமிழகத்துக்கு 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனாலேயே மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இதற்கிடையில், தற்போது தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறைப் பிரச்சினை பெரிதாக உர்ய்வெடுத்துள்ளது. செங்கல்பட்டில் கடந்த 2 நாட்களில் 13 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் தாங்கள் தலையிட்டு தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி தமிழகத்துக்கு உடனே 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 20 க்ரையோஜெனிக் கண்டெய்னர்களையும் அவற்றை கொண்டுவர ரயில் போக்குவரத்து வசதியையும் மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x