Published : 07 May 2021 08:39 PM
Last Updated : 07 May 2021 08:39 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 272 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 3 ஆயிரம் பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டும், சிகிச்சை பலன் அளிக்காமல் 34 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை வீரியமடைந்து தினசரி பாதிப்பு 26 ஆயிரத்தை எட்டியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறைவாக காணப்பட்ட நோய்த் தொற்று 2-வது அலையில் தலைகீழாக மாறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ள நிலையில், இன்று (மே.7) ஒரே நாளில் 272 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி நிலவரப்படி மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 7,939 ஆக இருந்தது. கடந்த ஒரு மாதமாக நோய் தொற்று பெருகி வந்ததால் நேற்றை பாதிப்புடன் சேர்ந்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 30 நாட்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல, கடந்த மாதம் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக இருந்தது. இந்நிலையில், கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வந்ததை தொடர்ந்து தற்போதைய உயிரிழப்பு எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 34 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 104 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பகுதி வாழ் மக்களை முறையாக கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தவறியதால் நோய் தொற்று அதிவேகமாக பரவி தற்போது 410 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 132 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,200-ஐ கடந்துள்ளது. திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. பெருகி வரும் கரோனா நோயாளிகளை காப்பாற்ற அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள், தனியார் கல்லூரி வளாகங்களில் தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டுகள் படுக்கை வசதியுடன் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால்
அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் நோயாளிகள் போதுமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவதியுற்று வருவதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில், கரோனா பரிசோதனை மேற்கொள்வோர்களுக்கு அதற்கான முடிவு வெளிவர 4 முதல் 6 நாட்கள் வரை ஆவதால் அதுவரை நோய் தொற்றுடன் பலர் வெளியே உலா வருவதால் கரோனா நோய் வேகமாக பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நோய் முற்றிய நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே, தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் வழங்குவதை போல, அரசு மருத்துவமனைகளிலும், சிறப்பு முகாம் மூலம் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாக வழங்கினால் பலரின் உயிர்களை காப்பாற்ற முடியும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உண்மை தான். இதை கட்டுப்படுத்த முழு முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
மக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. கடந்த மாதம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரமாக இருந்தது. தற்போது, 54 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வந்த மக்களின் வருகை தற்போது குறைவாகியுள்ளது.
அதேபோல, கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய் தொற்று இருப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தை பொறுத்தவரை உயிரிழப்பு என்பது அதிகமாக இல்லை. குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடித்தால் நோய் பரவல் படிப்படியாக குறையும். அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’. என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment