Published : 07 May 2021 06:43 PM
Last Updated : 07 May 2021 06:43 PM

தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகரிக்க வேண்டும்; இது நமக்கு நாமே ஆறுதல் அடையும் கூட்டம் அல்ல: ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்வராக இன்று (மே 07) பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவது குறித்து, மாலையில் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், புதிய தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநரும் மருத்துவ நிபுணருமான பிரதீப் கவுர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், கரோனா அலை தீவிரத்தைக் கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கை வசதிகளை அதிகமாக்குவது, கரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகமாக்குதல், ரெம்டெசிவிர் தட்டுப்பாட்டைக் குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு முன்னதாக, ஆட்சியர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"தமிழக மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பை வழங்கியிருக்கின்றனர். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், கரோனா சவாலை சமாளிக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த தலையாய பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில், உங்களுடைய பங்கு மிகப்பெரிய ஒன்று.

மக்களைக் காப்பதற்கான இந்த தலையாய பொறுப்பில் நீங்கள் அரசோடு அரசாக தோள் நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு சுமார் 25 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் 2 வாரங்களில் உயரும் என, மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை நிச்சயமாக அதிகரிக்கும்.

நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை போன்ற பல்வேறு துறைகள் முழுமையாக, ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இது இக்காலக்கட்டத்தின் முக்கியத் தேவையாக உள்ளது.

நோயைக் கட்டுப்படுத்தினால்தான், மருத்துவக் கட்டமைப்பின் மீது ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்க முடியும். எனவே, மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும், இது தொடர்பான அனைத்து அலுவலர்களும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் முழு முனைப்போடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

இறப்புகளைக் குறைத்திட மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற பணியாளர்கள் இரவு பகல் பாராது அரும்பணி ஆற்றி வருகிறார்கள். இதனை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேலும் தொடர வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்திட, தேவையான முயற்சிகளை உடனடியாக எடுத்திடுமாறும், மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன் கிடைக்கச் செய்யவும் மருத்துவத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

45 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அவர்கள் தடுப்பூசியைத் தாமாக முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தும் விகிதம், தமிழகத்தில் சற்று குறைவாக உள்ளது. இதனை அதிகப்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை போன்ற மாவட்டங்களில் தொற்றின் அளவு அதிகமாக உள்ளது. இறப்பு எண்ணிக்கையை குறைப்பதிலும் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இது நமக்கு நாமே ஆறுதல் அடையும் கூட்டம் அல்ல. உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும். உள்ளதை உள்ளபடியே முன்வைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

அமைப்பில் உள்ள குறைபாடுகளை, ஒளிவுமறைவின்றி, கடக்க வேண்டிய தூரத்தை முன்வைக்க வேண்டும். புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ளக்கூடிய கட்டாயம் எனக்கில்லை. முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம். தீர்வு குறித்து சிந்திப்போம். கொடுந்தொற்றைக் குறைப்போம். மக்கள் மகிழ்ச்சியடையக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவோம்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x