Published : 25 Dec 2015 07:06 PM
Last Updated : 25 Dec 2015 07:06 PM
கூத்து நடத்தச் செல்லும் கிராமங்கள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், தங்கள் பிழைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, தோல்பாவை கூத்து கலைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.
திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களிலும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பெய்த மழையால் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர் பாதிப்படைந்துள்ளனர். இந்த மழை, தோல்பாவை கூத்து கலைஞர்களையும் விட்டுவைக்கவில்லை.
திருநெல்வேலி ஐ.ஆர்.டி. கல்லூரி அருகில் உள்ள தனலெட்சுமிநகரில் தோல்பாவை கூத்து நடத்தும் கலைஞர்களின் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பல தலைமுறைகளாக கிராமங்கள்தோறும் சென்று தெருக்கூத்து மற்றும் தோல்பாவை கூத்து கலைகளை நிகழ்த்துவதையே தங்களின் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும், நவீன யுகத்தின் வளர்ச்சி இந்த கலைஞர்களை முழுஅளவில் பாதித்திருக்கிறது. வேறுதொழில் தெரியாததால் தற்போது பிழைப்புக்கே வழியின்றி தவிக்கிறார்கள்.
மழையாலும் பாதிப்பு
இந்த பாதிப்பு ஒருபுறம் இருக்க சமீபத்தில் பெய்த தொடர் மழையும் இவர்களது பிழைப்பில் கைவைத்துவிட்டது. ஒருசில குக்கிராமங்களில் கோயில் விழாக்கள், திருவிழாக்களின்போது இந்த கலைஞர்கள் வண்டி மாடு கட்டிக்கொண்டு கொட்டகை, மைக் செட், தோல்பாவை கூத்து கலையை நிகழ்த்த தேவையான படங்கள், திரை, ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் பயணமாவர்.
இதுபோல் விழா இல்லாத காலங்களிலும் கிராமங்களுக்கு சென்று தங்கியிருந்து தோல்பாவை கூத்து கலைகளை நிகழ்த்தி, அதில் கிடைக்கும் காசில் பிழைப்பு நடத்தி வந்தனர். கூத்து கலையை பார்க்க சிறியவர்களுக்கு 2 ரூபாய், பெரியவர்களுக்கு 3 ரூபாய் என்று குறைந்த கட்டணத்தையே வசூலிக்கிறார்கள்.
ராமாயண கதையை தோல்பாவை கூத்து மூலம் விளக்கும்போது ராமர் பட்டாபிஷேகத்துக்கு அடுத்த நாள் காலையில் வீடுகள்தோறும் சென்று அரிசி, உணவுப் பொருட்கள், காசு போன்றவற்றை காணிக்கையாக பெற்றுக்கொள்வார்கள்.
தற்போதைய மழையால் கிராமங்களில் கூத்து நடத்த பயன்படுத்தப்படும் திடல்கள் அனைத்தும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், அந்தந்த கிராமத்தினரே கூத்து நடத்த வராதீர்கள் என்று சொல்லிவிடுவதாக கலைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.
நலிவடைந்து வருகிறோம்
தோல்பாவை கூத்து கலைஞர் எம்.ராஜு கூறும்போது, “மழை காரணமாக திடல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கூத்து நடத்த முடியவில்லை. மேலும், கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் கூத்து பார்க்க குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கின்றனர். இதனால் பிழைப்புக்கு வழியின்றி இருக்கிறோம். எங்களுக்கு வேறு தொழிலும் தெரியாது.
தோல்பாவை கூத்து மூலம் நாங்கள் ராமாயணம், நல்லதங்காள், அரிச்சந்திரா, மயில் ராவணன், அஸ்மதியாகம் போன்ற கதைகளை மக்களுக்கு சொல்லி வருகிறோம். இதற்காக ஆட்டுத்தோலில் வரைந்து தயாரிக்கப்பட்டு சில தலைமுறைகளாக பயன்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட படங்கள் எங்களிடம் இருக்கின்றன. தற்போது அவை செல்லரித்து வருகின்றன. அதேபோன்று நாங்களும் நலிவடைந்து வருகிறோம்” என்றார்.
நிவாரணம் கிடைக்குமா?
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் என்று பலருக்கு நிவாரண உதவிகளை வழங்கும்போது, இதுபோன்ற சாதாரண கலைஞர்களையும் அரசு கவனத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT