Published : 07 May 2021 04:41 PM
Last Updated : 07 May 2021 04:41 PM
கனிமொழி எம்.பி. இல்லத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு ராஜாத்தி அம்மாளிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
ஸ்டாலின் இன்று (மே 07) காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் கலந்துகொண்டார். தொடர்ந்து, கோபாலபுரம் இல்லம், மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி, அண்ணா நினைவிடங்கள், பெரியார் திடல் ஆகிய இடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார்.
இதையடுத்து, சிஐடி காலனியில் உள்ள மக்களவை திமுக உறுப்பினரும், தன் சகோதரியுமான கனிமொழியின் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது கனிமொழி, ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கனிமொழியை ஆரத்தழுவி ஸ்டாலின் அன்பை வெளிப்படுத்தினார். பிறகு, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றார்.
பின்னர், அங்கிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அச்சமயத்தில் கனிமொழி உடன் நின்றிருந்த அவருடைய மகன் ஆதித்யாவை அரவணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின்போது துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இதையடுத்து, கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், "முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.
கரோனா சிகிச்சை பெறுவோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்கும் என்பது கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழக மக்களுக்கு நிச்சயம் ஆறுதல் தரும். முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT