Published : 07 May 2021 04:19 PM
Last Updated : 07 May 2021 04:19 PM
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றே வெளியிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 07) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தியும்கூட, மதுக்கடைகளை மூடுவதற்கான ஆணை இப்போது வரை பிறப்பிக்கப்படவில்லை. கரோனாவைத் தடுப்பதைவிட, மது விற்பனை செய்வதில் அரசு அதிக ஆர்வம் காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டால் அதில் முதலிடம் அளிக்கப்பட வேண்டியது மதுக்கடைகளை மூடும் முடிவுக்குதான். காரணம்... கரோனா வைரஸ் பரவுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று மது ஆகும்.
மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக கூட்டம் முண்டியடிக்கும்போது, அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது அங்கு நெருக்கமாக இருக்கும் அனைவருக்கும் எளிதாகப் பரவிவிடும்.
அதுமட்டுமின்றி, மது அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கரோனா வைரஸ் மிகவும் எளிதாகத் தாக்கிவிடும் என்பதால், மது குடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் மதுக்கடைகளை மூட ஆணையிடுமாறு கடந்த ஒரு மாதமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பிருந்த நிர்வாகம் மது வணிக நேரத்தை ஒரு மணி நேரம் மட்டுமே குறைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிந்தைய நிர்வாகம், வணிக நேரத்தைக் குறைப்பதாகக் கூறி, மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு மாற்றாக காலை 8 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய அரசு இன்று காலைதான் முறைப்படி பொறுப்பேற்றுள்ளது என்றாலும் கூட, மதுக்கடைகளை காலை 8 மணிக்குத் திறக்கும் முடிவை இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாய்வு நடத்தி, அவரது ஒப்புதலுடன் தான் அதிகாரிகள் எடுத்ததாக அறிகிறேன். இந்த முடிவு கரோனா பரவலைத் தடுப்பதற்கு பதிலாக அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மது வணிக நேரத்தைக் குறைப்பதாகக் கூறுவதெல்லாம் ஏமாற்று வேலைதான். தமிழகத்தில் மதுக்கடைகள் தினமும் 10 மணி நேரம் திறந்திருந்தாலும், 3 மணி நேரம் மட்டுமே திறந்திருந்தாலும் விற்பனை குறையாது என்பதைத் தமிழகத்தின் மது வணிகம் குறித்த நுட்பம் தெரிந்தவர்கள் அறிவர்.
மதுக்கடைகளுக்கு இரு நாள் விடுமுறை விடப்பட்டால், அதற்கு முந்தைய நாளில் வணிகம் மும்மடங்கு அதிகரிப்பதும், ஒரு நாள் விடுமுறை விடப்பட்டால் அதற்கு முந்தைய நாளில் மது வணிகம் இரு மடங்கு அதிகரிப்பதும் இந்த சூத்திரத்தின் அடிப்படையிலானது தான்.
தமிழகத்தில் இப்போது மது வணிக நேரம் 9 மணியிலிருந்து 4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றாலும் விற்பனை குறையாது. மாறாக, 9 மணி நேரத்தில் மது வாங்குபவர்கள் அனைவரும் 4 மணி நேரத்தில் குவிந்து மதுப்புட்டிகளை வாங்கிச் செல்வர் என்பதால் மதுக்கடைகள் கரோனா பரவல் மையங்களாக மாறும்.
அதனால்தான் கடந்த ஆண்டில் கரோனா முதல் அலை தொடங்கிய போதும், இப்போது இரண்டாம் அலை தொடங்கிய போதும் மதுக்கடைகளை முதலில் மூடுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டேன். ஆனால், மளிகை, காய்கறி கடைகளைத் தவிர வேறு எந்தக் கடையையும் நேற்று திறக்கக்கூடாது என்று ஆணையிட்ட தமிழக அரசு, மதுவை மட்டும் அதி அத்தியாவசியப் பொருளாக கருதியோ, என்னவோ மதுக்கடைகளை காலை 8 மணிக்கே திறக்க அனுமதித்திருக்கிறது. பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்.
கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தால், இந்த உண்மையை இன்றைய முதல்வர் ஸ்டாலினாலும் உணர்ந்துகொள்ள முடியும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது மதுக்கடைகளை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
உடனடியாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்பின், கரோனா பரவல் குறைந்துவிட்டதாகக் கூறி, மே 7-ம் தேதி, அதாவது, கடந்த ஆண்டு இதே மாதம் இதே நாளில் சென்னை தவிர்த்த மாவட்டங்களில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதை பாமக கடுமையாக எதிர்த்தது. திமுக இன்னும் ஒரு படி கூடுதலாக மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து கடந்த ஆண்டு இதே நாளில் அறப் போராட்டம் நடத்தியது.
சென்னையில் தமது வீட்டுக்கு முன்பாக, 'அடித்தட்டு மக்களுக்கு ஐந்தாயிரம் வழங்கு. கரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு?' என்ற பதாகையை ஏந்திப் போராட்டம் நடத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்று முதல்வராகியுள்ள நிலையில், அதே அக்கறை மற்றும் பொறுப்புணர்வுடன் தமிழ்நாட்டில் உடனடியாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்; தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும்; அடித்தட்டு மக்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை இன்றே வெளியிட வேண்டும்; அவ்வாறு அவர் வெளியிடுவார் என்று நம்புகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT