Published : 07 May 2021 02:50 PM
Last Updated : 07 May 2021 02:50 PM

முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின்: மதுரையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய அழகிரி ஆதரவாளர்கள்

மதுரை 

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து, மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற விழாவிலும் மு.க.அழகிரி குடும்பத்தினர் கலந்து கொண்டதால் இதுவரை மதுரையில் மு.க.அழகிரியை எதிர்த்து திமுகவில் அரசியல் செய்தவர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.

திமுகவில் மு.க.அழகிரி, தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் செல்வாக்குமிக்க நபராகவும் இருந்து வந்தார். கடந்த திமுக ஆட்சியில் தென்மாவட்ட அமைச்சர்கள் அவரது கண் அசைவில் செயல்பட்டனர்.

அவர் கூறிய நபர்களே திமுகவில் இடைத்தேர்தல்களில், உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவுத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக்கப்பட்டனர். மதுரை மாவட்டக் கட்சியிலும் அவரது ஆதரவாளர்களே முக்கியப் பதவிகளில் இருந்தனர். அதன்பிறகு திமுகவில் யார் அடுத்த தலைமை என்ற போட்டியில் ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் உரசல் ஏற்பட்டது.

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பலர் அவரிடம் இருந்து ஸ்டாலின் பக்கம் சென்றனர்.

கட்சியை விட்டுத் தன்னை நீக்கியதால் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் இருந்த மு.க.அழகிரி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஸ்டாலினைப் பற்றி அடிக்கடி சர்ச்சையான கருத்துகளைக் கூறிச் செல்வார்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் கட்சித் தலைமை பொறுப்பேற்றதற்கும் மு.க.அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் எதற்கும் பதில் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக ஸ்டாலினைப் பற்றி மு.க.அழகிரி எந்தக் கருத்தும் கூறாமல் இருந்து வந்தார். இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் எதிராகவும் செயல்படாமல் மவுனமாக இருந்தார்.

திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த விழாவில் மு.க.அழகிரி மகனும், மகளும் கலந்து கொண்டனர். மு.க.அழகிரியும் ஸ்டாலினுக்கு, ‘என் தம்பி முதல்வராவதில் எனக்குப் பெருமை' என நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார்.

அண்ணனும், தம்பியும் இணைந்ததால் மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக நகர் முழுவதும் பல்வேறு வாழ்த்து போஸ்டர்களை ஓட்டியுள்ளனர்.

அதில், ‘இணைந்த இதயங்களே’, ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும், தலைமையேற்க வாழ்த்திய அண்ணணுக்கு நன்றி, ’ என போஸ்டர்களை மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஓட்டியுள்ளனர்.

தற்போது குடும்ப ரீதியாக அண்ணணும், தம்பியும் இணைந்ததால் இதுவரை மதுரை திமுகவில் மு.க.அழகிரிக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x