Published : 07 May 2021 02:36 PM
Last Updated : 07 May 2021 02:36 PM

உதயச்சந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் தனிச் செயலர்களாக நியமனம்

சென்னை

பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறம்படச் செயலாற்றிய உதயச்சந்திரன், மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய உமாநாத் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முதல்வர் பொறுப்பேற்ற ஸ்டாலின் கோட்டைக்குச் சென்று முதல் கையெழுத்தாக 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டார்.

கரோனா நிவாரணத் தொகை ரூ.4000. அதில் இந்த மாதமே ரூ.2000 வழங்க வேண்டும், அரசின் சாதாரணப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம், கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை செலவை அரசே ஏற்கும், பால் விலை ரூ.3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்கு தனித்துறை, அதிகாரி நியமனம் என்பதே அந்த 5 அரசாணைகள் ஆகும்.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தனது அரசை நெருக்கடியான காலகட்டத்தில் திறம்பட நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேர்மையாக திறமையாக இயங்கும் அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார்.

தற்போது முதல்வரின் தனிச் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.

1. தொல்லியல் துறை ஆணையராக இருக்கும் முதன்மைச் செயலர் உதயசந்திரன் முதல்வரின் தனிச் செயலாளர் 1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட உதயச்சந்திரன் சமச்சீர் கல்விக்குப் பெரிதும் வித்திட்டவர். தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டதில் அங்கும் சிறப்பாகப் பணியாற்றி அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். 1995 பேட்ச் அதிகாரியாகப் பணியில் இணைந்தவர் உதயச்சந்திரன்.

2. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குனராகப் பதவி வகிக்கும் உமாநாத் முதல்வரின் தனிச் செயலர் 2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் எம்பிபிஎஸ் மருத்துவரான இவர் 2001ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் இணைந்த அதிகாரி ஆவார்.

3. அருங்காட்சியக இயக்குனராகப் பதவி வகிக்கும் எம்.எஸ்.சண்முகம் முதல்வரின் செயலர் 3 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஏ. பொருளாதாரம் பயின்று சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று 2002ஆம் ஆண்டு பணியில் இணைந்த அதிகாரி ஆவார்.

4. தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை இயக்குனர், தொழிற்சாலைகள் ஆணையர் பதவி வகிக்கும் அனு ஜார்ஜ் முதல்வரின் செயலர் 4 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எம்.ஏ. சோஷியாலஜி படித்தவர். 2003ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் இணைந்த அதிகாரி ஆவார்.

நால்வர் நியமனத்துக்கான உத்தரவை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x