Published : 07 May 2021 11:27 AM
Last Updated : 07 May 2021 11:27 AM

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்

கருணாநிதி உருவப்படத்திற்கு ஸ்டாலின் மரியாதை.

சென்னை

முதல்வராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது. இதில், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின், ஆட்சி அமைக்க உரிமை கோரியதன் அடிப்படையில், இன்று (மே 07) காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதல்வர் கலந்துகொண்டார்.

இதன்பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களுடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். அங்கு, திமுக தொண்டர்கள் பலரும் சூழந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், வீட்டுக்குள் சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் முதல்வர் ஆசி பெற்றார்.

பின்னர், தன் தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றார். அப்போது, உணர்ச்சிப்பெருக்கால் கண்கலங்கிய ஸ்டாலினை, அவரது தங்கை செல்வி ஆறுதல்படுத்தினார். அப்போது, மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, நெருங்கிய உறவினர்கள் உடனிருந்தனர். உறவினர்கள் பலரும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தும், ஆசீர்வாதமும் பெற்றனர்.

கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்படும் முதல்வர், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி, அண்ணா நினைவிடங்களுக்கும், பெரியார் திடலுக்கும் செல்கிறார். மேலும், கருணாநிதியின் சிஐடி இல்லத்திற்கும், மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இல்லத்திற்கும் செல்லவிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x