Published : 07 May 2021 10:41 AM
Last Updated : 07 May 2021 10:41 AM
சிஆர்பிஎஃப் பாதுகாப்பில் இருந்து பின்னர் அது விலக்கப்பட்டு சாதாரண போலீஸ் பாதுகாப்புடன் இருந்த இதுவரை இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு இனி என்ன வகையான பாதுகாப்பு வழங்கப்படும் ஒரு பார்வை.
தமிழக அரசியல் தலைவர்களில் முக்கிய நபர்களுக்கு மத்திய கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. முதல்வர் உள்ளிட்ட முக்கிய விஐபிக்களுக்கு பாதுகாப்பு தர என்.எஸ்.ஜி எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முக்கிய வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவருமான, முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதிக்கும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர எஸ்.எஸ்.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஒன்றை மாநில அளவில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். தற்போது மத்திய உள்துறை அமைச்சரின் காஷ்மீருக்கான ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் இதற்குத் தலைமையேற்று வடிவமைத்தார். இது முழுக்க முழுக்க முதல்வருக்கான பாதுகாப்புக்காக, போலீஸில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து உருவாக்கப்பட்டது.
இதற்குப் பயிற்சி அளிக்க பிஎஸ்எஃபிலிருந்து மனோகரன் வரவழைக்கப்பட்டு தமிழக கேடராக மாற்றப்பட்டார். அவர் தலைமையில் இப்பிரிவு செயல்பட்டு வந்தது. 700 போலீஸாருக்கு மேல் கொண்ட அமைப்பாக இப்பிரிவு இயங்கியது. இந்நிலையில் ஜெயலலிதா வைத்திருந்த எஸ்.எஸ்.ஜி படையை, கருணாநிதி முதல்வரான பின்னர் எண்ணிக்கையை 140 என்கிற அளவுக்குக் குறைத்து ‘கோர்செல்’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.
பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோர்செல் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். கோர்செல் முழுக்க முழுக்க முதல்வர் பாதுகாப்புக்கானது. ஆனால் ஜெயலலிதா மறையும் வரை அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் இருந்தது. இதைத் தவிர இரண்டாம் கட்டப் பாதுகாப்பு சில விஐபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 3 முக்கிய விஐபிக்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சிஆர்பிஎஃப் கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சுப்பிரமணியன் சுவாமி, ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவைகள் அனைத்து விலக்கப்பட்டது. சுப்ரமணியன் சுவாமி தவிர யாருக்கும் மத்திய அரசின் பாதுகாப்பு இல்லை.
இந்நிலையில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு “கோர்செல் பிரிவு ” போலீஸார் பாதுகாப்பு அளித்து வந்தனர். ”கோர்செல்” என்பது தனிப்பிரிவு அது எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு இதில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 ஷிப்டுகளும் இயங்கும் வகையில் பாதுகாப்பை அளிப்பார்கள். அனைவரும் சஃபாரி உடையுடன் இயங்குவார்கள்.
இவர்கள் தான் முதல்வருடன் மெய்க்காவலர்கள் போல் செல்வார்கள். முதல்வரின் கான்வாயில் இவர்கள்தான் பொறுப்பேற்று செல்வார்கள். முதல்வர் இல்லம், அலுவலகம், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதல்வர் உடன் இருந்தும் நிகழ்ச்சிக்கு முன்னர் பாதுகாப்பு குறித்து கண்காணித்து அனுமதி வழங்குவது, நிகழ்ச்சி நடக்கும்போது நிகழ்ச்சிப்பகுதி, சுற்றுப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பையும் கண்காணிப்பார்கள். இதற்கான ஒரு கேம்ப் அலுவலகம் முதல்வர் இல்லத்திலேயே இயங்கும்.
தற்போது ஸ்டாலின் முதல்வரான நிலையில் அவருக்கு “கோர்செல்” எனப்படும் அதே வகை பாதுகாப்பு வழங்கப்படும். இது தவிர “ செக்யூரிட்டி சென்னை போலீஸ்” (எஸ்சிபி) எனும் பிரிவு உள்ளது. இந்தப்பிரிவும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் வெடிகுண்டு சோதனை, மோப்ப நாய் சோதனை, ஜாமர்கள் போடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும், தலைமைச் செயலகத்திலும் முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும் பாதுகாப்பை வழங்குவார்கள்.
இது தவிர சென்னை மாநகர போலீஸ் பாதுகாப்பும், ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படும், இவர்கள் முதல்வர் செல்லும் வழியெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா, நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார்கள். வழிக்காவல் எனப்படும் காவல்பணி தொடர்ச்சியாக வழங்குவார்கள். இதுதவிர முதல்வர் இல்லத்தைச் சுற்றி சாலைத் தடுப்பு அமைத்து பாதுகாப்பதும் இவர்கள் பணி.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை அவருக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைத்தாண்டி முதல்வர் கான்வாய் எனப்படும் குண்டுத்துளைக்காத, அரசு இலச்சினை பொருத்திய கார், விஐபி எஸ்கார்டு என மூன்று பிரிவினர் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT