Published : 14 Jun 2014 07:13 PM
Last Updated : 14 Jun 2014 07:13 PM
காவிரி பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவுப்படியும், நடுநிலையுடனும் மத்திய அரசு செயல்படும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
இது குறித்து சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவர் இன்று நிருபர்களிடம் கூறும்போது, "காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே பாஜக ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது தலையீடு அவசியமில்லாத போதிலும், காவிரி பிரச்சினையில் அவர் தலையிட்டு தமிழகம் மற்றும் கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படியே மத்திய அரசு செயல்படும். இரு மாநிலங்களும் பயன்பெறும் வகையில் நடுநிலையான முறையில்தான் மத்திய அரசு நடந்து கொள்ளும்" என்றார் அவர்.
மேலும், "தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே இலங்கைக்கு சென்று தமிழர்கள் நலம் குறித்து பேசினார். இப்போதும் அவர் அதில் உறுதியாகவுள்ளார். தமிழக மீனவர் பிரச்சினைகளைத் தீர்க்க பாஜக அரசு முழு முயற்சி மேற்கொள்ளும்" என்றார் நிர்மலா சீதாராமன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT