Last Updated : 26 Dec, 2015 08:11 AM

 

Published : 26 Dec 2015 08:11 AM
Last Updated : 26 Dec 2015 08:11 AM

இன்று சுனாமி நினைவு தினம்: மனதில் நீங்காத வடுவை உண்டாக்கிய ஆழிப் பேரலைகள்

11 ஆண்டுகள் ஆகியும் துயரத்தில் இருந்து மீளாத மக்கள்

*

தமிழகத்தின் கடலோர கிராமங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சுனாமியை மக்கள் இன்னும் மறக்க வில்லை. சுனாமி என்ற வார்த்தை யைக் கேட்டாலே அதனால் பாதிக்கப் பட்டவர்களின் கண்களில் அச்சம் எட்டிப் பார்க்கிறது. சுனாமியால் இழந்த சொந்தங்களையும் உடைமைகளையும் நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள். சுனாமி தாக்குதல் மக்களின் இதயங்களில் ஒரு நீங்கா வடுவை ஏற்படுத்தியுள்ளது.

கடலோர மக்களின் வாழ்க்கையை சுனாமி என்ற பெயரில் கடலலைகள் புரட்டிப் போட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. மறக்க முடியாத அந்த நாளின் நினைவு தினமான இன்று, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் இப்போதைய வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது என்பதை அறிய பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றோம். அங்குள்ள மக்கள் வேதனையுடன் தெரிவித்த சில கருத்துகள்:

எம்.முத்தைய்யா (தலைவர், பைபர் படகு உரிமையாளர் சங்கம்):

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாங்கள் படகுகள், வீடுகள், உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்தோம். இதனால், எங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. நாங்கள் பயன்படுத்தும் ஒரு பைபர் படகின் விலை ரூ.2.5 லட்சம். சுனாமியின்போது எங்களின் ஏராளமான படகுகள் சேதம் அடைந்தன. புதிய படகுகளை மானிய விலையில் வாங்க நிவாரண உதவி வழங்குவதாக அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை அவற்றை வழங்கவில்லை. மேலும், படகுகளில் பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்க ரூ.60 ஆயிரம் தருவதாக அரசு தெரிவித்தது. அந்தப் பணமும் கிடைக்கவில்லை.

எம்.சுமித்ரா (குடும்பத் தலைவி, காசிமேடு):

சுனாமியை இப்போது நினைத்தாலும் பயத்தால் மனம் பதறுகிறது. சுனாமியால் எங்கள் பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மணலி, வாசு நகர் உள்ளிட்ட இடங்களில் சுனாமி குடியிருப்புகள் கட்டித் தருவதாக அரசு கூறியது. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே வீடுகள் கிடைத்தன. அவர்களும் தொழில் காரணமாக அங்கு செல்ல மறுத்து விட்டனர். உண்மையில் யாருக்கு வீடுகள் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. எனவே, எங்களுக்கு சொந்த வீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.லஷ்மி (மீன் வியாபாரி, காசிமேடு):

நான் காசிமேடு பகுதியில் பல வருடங்களாக கருவாடு வியாபாரம் செய்து வருகிறேன். சுனாமி தாக்கியதில் எனது கடை முற்றிலும் சேதம் அடைந்தது. என்னைப் போல் பாதிக்கப்பட்ட ஏராளமான வியாபாரிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும், எங்களுக்கு மணலியில் சுனாமி குடியிருப்பில் வீடு தருவதாகக் கூறி அரசியல்வாதிகள் கணக்கெடுத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் சிலருக்கு மட்டுமே வீடுகளை ஒதுக்கித் தந்தனர். மற்ற வீடுகளை அவர்களே எடுத்துக் கொண்டனர். எனவே, எங்களுக்கு வியாபாரம் செய்யவும், குடியிருக்கவும் ஒரு நிரந்தர இடத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

எம்.பட்டு, தேசம்மா, சேதப்பட்டு (சீனிவாசபுரம்):

சுனாமி என்ற துயரத்தை எங்களால் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாது. சுனாமியால் எங்களது வீடுகள், வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. உயிரை காப்பாற்றிக் கொள்ள மேடான பகுதிகளை நோக்கி ஓடினோம். எங்களுடைய உறவினர்கள் 6 பேர் சுனாமியால் பலியானார்கள். அந்த துயரத்தை எங்களால் இன்னும் மறக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட எங்களுக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் வீடு கட்டித் தருவதாக அரசு கூறியது. ஆனால் எங்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைச் செய்ய இங்குதான் நாங்கள் இருக்கவேண்டும். இதை விட்டு நாங்கள் எங்கு செல்வது. எங்களுடைய குழந்தைகள் படிக்கிறார்கள். அவருடைய எதிர்காலம் என்ன ஆவது? சுனாமிக்கு பிறகு தற்காலிகமாக குடிசைகளில் வாழ்ந்து வருகிறோம். எனவே, எங்களுடைய குடிசைகளை அகற்றிவிட்டு, தளம்போட்ட வீடுகளை அரசு கட்டித் தர வேண்டும்.

ஆர்.ரோஷி (பட்டினப்பாக்கம்):

இந்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். சுனாமி வந்தபோது எங்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை இழந்தேன். அதன்பிறகு சுமார் 5 வருடங்களாக குடும்ப அட்டையை பெற முயற்சித்தேன். ஆனால், இதுவரையில் கிடைத்தபாடில்லை. இப்போது, குடும்ப அட்டை பெற முயற்சிப்பதை விட்டுவிட்டேன். எனக்கு குடும்ப அட்டையும், சிறிய தொழில் தொடங்க கடன்வசதியும் செய்து கொடுத்தால் போதும். என் உழைப்பின் மூலம் முன்னேறிவிடுவேன்.

எ.குழந்தைராஜ் (பட்டினப்பாக்கம்):

எங்கள் பகுதியில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட எங்களுக்கு இப்பகுதியிலேயே வீடுகளை கட்டித்தர வேண்டும். பட்டினப்பாக்கம் பகுதிக்கு உள்பகுதியில் அதிகமாக காலி இடம் இருக்கிறது. ஆனால், அரசு எங்களுக்கு அங்கு வீடுகளை கட்டித்தர மறுக்கிறது. செம்மஞ்சேரியிலும், கண்ணகி நகரிலும் நாங்கள் குடிபெயர்ந்தால் எவ்வாறு வாழ்க்கையை நடத்துவது? இதே பகுதிகளில் புதிதாக குடியிருப்புகளை கட்டித்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x