Last Updated : 06 May, 2021 09:14 PM

2  

Published : 06 May 2021 09:14 PM
Last Updated : 06 May 2021 09:14 PM

டெல்டா எம்எல்ஏக்கள் 15 பேரில் ஒருவர் கூட அமைச்சர் இல்லை: டெல்டா மாவட்டங்கள் புறக்கணிப்பா?- திமுகவினர் அதிருப்தி

தஞ்சாவூர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (7-ம் தேதி) 16-வது சட்டப்பேரவையில் புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள புதிய அமைச்சரவைப் பட்டியலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் யாருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் நாளை ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளது. இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையிலிருந்து ஆளுநரின் செயலாளர் மூலம் 34 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 7இல் திமுகவும், திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு தொகுதிகளில் மூன்றும், நாகை மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளில் இரண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளைத் திமுக கைப்பற்றியிருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் திமுகவின் புதிய அமைச்சரவையில் திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் பூண்டி எஸ்.கலைவாணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெறக்கூடும் எனத் திமுகவினரால் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியான பட்டியலில் 15 எம்எல்ஏக்களில் ஒருவர் பெயர் கூட இடம் பெறாததால் திமுகவினரும், டெல்டா மாவட்ட மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கும்பகோணம் கோசி.மணி, திருவாரூர் உ.மதிவாணன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.

2011-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் திமுகவில் 23 பேர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் தொகுதிகளில் டெல்டா மாவட்டத் தொகுதிகளைக் குறிப்பிடலாம்.

எனவே, இந்த மாவட்ட மக்களின் பிரதிநிதிகளை அமைச்சரவையில் இடம் பெறச் செய்ய மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என டெல்டா மாவட்டத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x