Published : 06 May 2021 08:02 PM
Last Updated : 06 May 2021 08:02 PM
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக இன்று ஆட்சியமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். அவருடன் சேர்ந்து 34 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க உள்ளனர். அதற்கான பட்டியல் இன்று வெளியானது.
இதில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.காந்தியும் திமுக அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை திமுக கைப்பற்றியிருந்தாலும் அம்மாவட்டத்தில் இருந்து ஒருவர் கூட அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெறாதது பெருத்த வருத்தம் அளிக்கிறது என அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்ற முன்னாள் அதிமுக அமைச்சர்களான சு.முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன், எஸ்.ரகுபதி ஆகிய 6 பேர் தற்போது திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இது முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
இருந்தாலும், ஆரம்பக் காலகட்டத்தில் இருந்தே திமுகவில் இருக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜோலார்பேட்டை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சி.வீரமணி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கே மாவட்ட அமைச்சராகச் செயல்பட்டார்.
அவர் அமைச்சராக இருந்தும் 3 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு எந்தப் பணியும் நடைபெறவில்லை. எனவே, திமுக ஆட்சி அமைத்த உடன் திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் வழங்கப்படும். அதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்துக்குப் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்த்தோம்.
மேலும், தமிழக அமைச்சராக உள்ளவர்களால் ஒரு மாவட்டம் என்னென்ன வழிகளில் வளர்ச்சி பெறும் என்பதை திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் நாங்கள் கனவு கண்டோம். ஆனால், இன்று வெளியான அமைச்சரவைப் பட்டியலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்களில் ஒருவர் பெயர்கூட இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது’’ என்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொகுதியைத் தவிர்த்து மற்ற 3 தொகுதிகளைத் திமுக கைப்பற்றியுள்ளது. இதில், திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 2-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.நல்லதம்பிக்கு திமுக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என அக்கட்சியின் நிர்வாகிகள் அதிகம் எதிர்பார்த்தனர்.
அதேபோல, அதிமுகவில் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ‘ஹாட்ரிக் வெற்றிக்கு’ உலை வைத்த திமுக மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவரது பெயரும் அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெறாதது, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதே நேரத்தில், மேற்கு மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டத்தில் இனி எந்த ஒரு அரசு விழாவாக இருந்தாலும் கிழக்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் இருந்து அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் மற்றும் ஆர்.காந்தியைக் கொண்டே அரசு விழாக்களைத் தொடங்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT